இந்திய விமானப்படை கொரானா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது. கொரோனா வைரஸின் பரவல் மற்றும் COVID-19இன் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இந்திய விமானப்படை தொடர்ந்து முழு ஆதரவை அளித்து வருகிறது.
டெல்லி, சூரத், சண்டிகர் முதல் மணிப்பூர், நாகாலாந்து, யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த மூன்று நாட்களில் ஏறக்குறைய 25 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை இந்திய விமானப் படை விமானம் மூலம் அனுப்பியுள்ளது. அத்தியாவசிய மருத்துவப் பொருள்களான பாதுகாப்பு உபகரணங்கள், தொற்று தடைப்பொருள்கள் (சானிடைசர்ஸ்), அறுவை சிகிச்சைக் கையுறைகள் (Gloves) வெப்ப ஸ்கேனர்கள் (Thermal scanners) மற்றும் மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன.
மேலும் யூனியன் பிரதேசமான லடாக்கில் பரிசோதனை செய்யப்பட்ட COVID – 19 பரிசோதனை மாதிரிகளும் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டன. இது தவிர, இந்திய விமானப்படையின் C-17, C-130, An-32. AVRO மற்றும் டோர்னியர் (Dornier) விமானங்களும் தேவைகளின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. மேலும் அனைத்து அத்தியாவசிய அவசியமான தேவைகளையும் இந்திய விமானப்படை எதிர்கொண்டு பூர்த்தி செய்யும்.
தனிமைப்படுத்தப்படுபவர்கள் தங்குவதற்கு வசதியாக இந்திய விமானப்படை (IAF) நாடு முழுவதும் பல்வேறு மருத்துவப் பரிசோதனை மையங்களையும் கூடுதலாகத் தயார் நிலையில் வைத்துள்ளது.
ஈரான் மற்றும் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியக் குடிமக்களுக்கு முறையே ஹிந்தான் (Hindan) மற்றும் தாம்பரத்தில் உள்ள விமான தளங்களில் மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படுகிறது.
பெங்களூரில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திலும் COVID – 19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.