காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் – திரு.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ஒரு பச்சை புளுகு …
கொரோனா யுத்தத்தில் துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் காவிரி நீர் ஆணையத்தை சேர்ப்பதை பற்றி பொய்யும் புனை சுருட்டும் நிறைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் …
கொரோனா போரில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கும் எங்களுக்கு ஸ்டாலினுக்கு பதில் லாவணி பாட நேரமில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் கூட்டணியில் இருந்தபோதும் காவிரி நீர் உரிமை போராட்டம் பேச்சுவார்த்தை நடத்தி நதிநீர் பெற்றுத்தராத திமுகவும் ஸ்டாலினும் கொரோனாவின் கொடிய முகம் கோர தாண்டவமாடும் போது, மக்கள் உயிரைக் காக்க முற்படாமல் போராட்டம் நடத்துவேன் என அறிக்கை விடுவது சிறுபிள்ளைத்தனமானது.
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை மத்திய ஜலசக்தி அமைச்சகத்தில் இணைத்தது, அதற்கு மேலும் வலுவூட்ட, பலம் சேர்க்க, விரைவாக முடிவெடுக்க என்கிற அடிப்படை ஞானம் கூட திரு.ஸ்டாலின் இடத்தில் இல்லாதது ஏன்? ஆணையத்தின் சுயசார்பு மற்றும் தன்னாட்சியை முடக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறுவது மத்திய மாநில அரசுகள் சிறப்பான நிவாரண பணிகளில் மக்கள் ஆதரவை பெற்று வருவதால் ஏற்பட்ட தோல்வி புலம்பல்.
ஒருவேளை ஸ்டாலின் கூறியது போல் ஆணையத்தின் பல் பிடுங்கப்பட்டது, பலம் குறைக்கப்பட்டது என்பது உண்மையாக இருந்தால், இதோடு சேர்ந்து கிருஷ்ணா நதிநீர் ஆணையம், கோதாவரி நதி நீர் ஆணையம், கங்கை நதி நீர் மாசு தடுக்கும் ஆணையம், தேசிய நீர் தகவல் ஆணையம் என ஏழு அமைப்புக்களையும் ஜலசக்தி அமைச்சகத்தில் இணைத்துள்ளார்களே. இதில் சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர் எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாம் இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருப்பார்களே, அப்படி வெளியிடப்படவில்லையே ஏன்?
அதெல்லாம் இருக்கட்டும் திரு.ஸ்டாலின் அவர்களே, தமிழ்நாட்டு மக்களின் கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?
- 50 ஆண்டு கால காவிரி நீர் ஒப்பந்தத்தை முதன்முதலில் புதுப்பிக்க தவறியது யார்?
- 1974-ஆம் ஆண்டு மாநில முதல்வரின் பேச்சுவார்த்தையில் மத்திய நீர்ப்பாசன அமைச்சர் திரு.ஜெகஜீவன்ராமிடம் அவர் கேட்காமலேயே தமிழ்நாட்டின் 100 TMC தண்ணீர் உரிமையை விட்டுக்கொடுத்தது யார்?
- 2004 – 2013 வரை மத்திய அரசில் அங்கம் வகித்து கூட காவிரி பிரச்சினையை தீர்க்காதது யார்?
- கர்நாடகாவில் உள்ள கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டு காவிரி நீரைப் பெற்றுத் தராதது யார்?
- கூட்டாட்சி தத்துவம் மாநில உரிமை என பேசும் நீங்கள், கூட்டாட்சி தத்துவத்துக்கு உலைவைக்கும் அரசியல் சட்டம் 356-வது பிரிவை அதிகம் பிரயோகித்த காங்கிரஸ் கட்சி, குறிப்பாக உங்கள் மீதே இரண்டு முறை பிரயோகித்தார்களே, அவர்களோடு தொடர்ந்து சந்தர்ப்பவாத கூட்டு வைத்திருக்கிறீர்களே, முரண்பாடுகளின் மொத்த உருவம் தானே திமுக?
இவ்வளவு துரோகங்களையும் தமிழ் மக்களுக்கு இழைத்து விட்டு இன்று நல்லவன் போல் திமுக வேஷம் போடுவதை நாடு ஏற்காது திரு ஸ்டாலின் அவர்களே!
கடிதம்:- டாக்டர் திரு.எல் முருகன் மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு.