பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்’ ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று அறிவித்துள்ளது. இந்த மருத்துவ கிட் மூலம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மருத்துவ ரீதியில் சோதித்ததில் 100 சதவீத சாதகமான முடிவுகள் வந்துள்ளன’ என்று பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பதஞ்சலியின் நிறுவனர் யோகா குரு ராம்தேவ், “இந்த மருந்தின் பெயர் கோரோனில் மற்றும் ஸ்வாசரி (Coronil & Swasari). நாடு முழுவதும் சுமார் 280 கொரோனா நோயாளிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் ராம்தேவ்.
கொரோனா தடுப்பு மருந்து குறித்துப் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“கொரோனாவுக்கு எதிரான மருந்து அல்லது தடுப்பு மருந்துக்காக மொத்த நாடும் உலகமும் காத்திருந்தது. இந்த நேரத்தில் பதஞ்சலி ஆராய்ச்சி மையம் மற்றும் NIMSம் இணைந்து ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான மருந்து குறித்து அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.
டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை 280 நோயாளிகளுக்குக் கொடுத்தோம். அனைவரும், 100 சதவீதம் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள்.
NIMS பல்கலைக்கழகத்தின் உதவியோடு 95 நோயாளிகள் மீது மருத்துவக் கட்டுப்பாடு ஆய்வையும் நாங்கள் மேற்கொண்டோம். நாங்கள் ஆய்வு நடத்திய 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர். 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்” என்று பெருமிதத்தோடு அறிவித்துள்ளார் பாபா ராம்தேவ்