நாடக கலையில் நடிப்பு என்பது ஒரு சிரமான இடம். கதாரிசியன் மனதில் இருக்கும் கற்பனை பிம்பத்துக்கும், ஒரு எழுத்தாளன் எழுதும் வரிகளுக்கும் , இயக்குநர் வைக்கும் காட்சிகளுக்கும், பாடல்களுக்கும், இசைக்கும் இன்னும் பலவுக்கும் மிக பொருத்தமாக வர வேண்டிய பாத்திரம் அது
ஆம் எல்லோரின் உணர்ச்சிகளையும் ரசிகனுக்கு கடத்தி அவனை கட்டுபோட்டு உருக வைத்து கைதட்டி வைக்கும் மிக நுட்பமான விஷயம் அது.
அதற்கு பல விஷயங்கள் பொருந்திவர வேண்டும் தெய்வத்தின் அனுகிரகம் இல்லை என்றால் அது சாத்தியமில்லை
முகம், குரல், உடல்மொழி, வசனங்களை உச்சரிக்கும் அழகு, ஞாபக சக்தி, பாத்திரமாக ஒன்றிபோகும் மனம், கலை உணர்வு, எல்லா உணர்ச்சிகளையும் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டுவரும் லாவகம் எல்லாம் மொத்தமாக கலந்து கிடைப்பது ஒரு வரம்
அந்த வரம் அந்த கணேசனுக்கு கிடைத்தது, நாடகங்களில் மிக சரியாக அதை பயன்படுத்திய கணேசனுக்கு காலம் அவனை நடினனாக்கியது, அவனும் நாடக அனுபவத்தினையெல்லாம் கொட்டி தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுவழி காட்டினான்
ஆம், தமிழ் சினிமாவுக்கு அவன் கொடுத்தது தலைகீழ் திருப்பம். பாடல்களிலும் மெல்லிய தென்றல் போன்ற வசனங்களிலும் இருந்த தமிழ் சினிமா உலகை தன் சிம்ம குரல் மூலம் புரட்டி போட்ட வித்தகன் அவன், அவனும் புகழ்பெற்றான் அவனால் தமிழ் சினிமாவும் புகழ்பெற்றது.
அந்த புகழை கடைசிவரை காத்து நின்றான் அந்த உன்னத நடிகன்
எல்லா படத்தின் வேடங்களையும் அவ்வளவு கவனமாக தத்ரூபமாக நடித்து காட்டினான், கடைசிவரை அந்த தொழில்பக்தி இருந்தது, அவனின் வெற்றிக்கெல்லாம் காரணம் அந்த அர்பணிப்பே.
ஒரு புருவத்தில் ஒரு நடிப்பும் இன்னொரு புருவத்தில் இன்னொரு நடிப்பும் கொடுத்த அந்த வித்தை நிச்சயம் ஒரு அபூர்வ திறன்.
தமிழக நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர்.
நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார்.
அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும், அது கொடுத்த ஈர்ப்பும் எத்தனை எத்தனையோ மாமனிதர்களை உணர்வோடு காட்டிற்று,
தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. பாசத்தின் உருக்கத்தை அதுவே காட்டிற்று. அண்ணனின் பொறுப்பையும், கடமையின் கண்ணியத்தையும் காட்டிற்று
குடிகார முகம் முதல் ஏழைகுடிமகன் வரை அது அப்படியே காட்டிற்று.
எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான்
கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு
மன்னன் வேடத்துக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கனவு, காவல்துறைக்கு அந்த சவுத்திரி ஒரு கனவு
எல்லா தங்கை பாத்திரத்துக்கும் அந்த பாசமலர் அண்ணன் ஒரு கனவு, எல்லா யோகிக்கும் அந்த ராஜரிஷி ஒரு கனவு
நாதஸ்வர வித்வானாக வந்த சில நொடிகளில் அவனால் அட்டகாசமாக மேல் நாட்டு கிளாரினெட்டுக்கும் , பியாணோவுக்கும் ஸ்டைலாக மாறமுடியும்
மன்னனாக வரும் அவனுக்கு நொடியில் பிச்சைகார கோலத்தில் புலம்பவும் முடியும்
எந்த வேடம் கொடுத்தாலும் அதில் ஆழ சென்று உணர்ந்து ஆத்மாவால் நடிக்கும் அந்த அர்பணிப்பு அவனிடம் இருந்தது, அதை அவன் முகமும் கண்களும் சொன்னது, அவனின் வெற்றிக்கு அதுதான் காரணம்.
அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்
அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்முன் நிறுத்தபட்டது.
மகாகவி காளிதாஸில் அவன் ஆடுமேய்த்த அழகு, ஒரு கோனார் செய்யமுடியாதது, மக்களை பெற்ற மகராசியில் செய்யும் உழவு விவசாயி செய்யமுடியாதது, பிராமண வேடத்தில் அவர் சந்தியா வந்தனம் செய்யும் அழகில் அந்தணர்களே அசந்தனர்.
இவை எல்லாம் சிறுதுளிதான்.
பாகபிரிவினை படம் வந்தபின் ஒருவிழாவில் பார்த்துவிட்டு வெள்ளையன் சொன்னான், கதைக்கேற்ப ஒரு மாற்றுதிறணாளியினை டைரக்டர் நடிக்க வைத்திருக்கின்றார், அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது.
இந்திய விடுதலை போராட்ட தலைவர்களாக வஉசி பாத்திரத்தினை காணும்பொழுது நாட்டுபற்று மேலோங்கும், அந்த வரலாறு கண்முன் வரும்.
சிந்துநதியின் மிசை நிலவினிலே என அந்த பாரதிபாடலில் வரும் சிவாஜிகணேசனில் மொத்த இந்தியாவையும் காணலாம், இன்றும் பாகிஸ்தானின் சிந்துநதியினை காணும்பொழுதெல்லாம் பாரதியும் கூடவே சிவாஜியும் நினைவுக்கு வராதவன் இந்திய தமிழனாக இருக்க முடியாது.
கொஞ்சம் தன் இமேஜினை காப்பாற்றிகொள்ளும் நடிகனாக, தந்திர நடிகனாக இருந்திருந்தால் இன்று ஆட்சிகட்டில் அவனுக்கு கீழேதான் இருந்திருக்கும்.
ஆனால் நடிப்பிற்கு துரோகம் செய்ய அவன் விரும்பவில்லை, குடிகாரன் முதல் சிகரெட் வரை கையிலேந்தி நடித்தான், பெண் பித்தனாக , கோமாளியாக , இரக்கமில்லாதவானக நடிக்க அவனுக்கு தயக்கமே இல்லை.
காரணம் அது அவன் வணங்கிய தொழில். அதுதான் அவனின் திரை பலம் மற்றும் ஒரே அரசியல் பலவீனம்.
திரையினை நிஜமென நம்பிய தமிழகத்தின் சாபக்கேடுதான் அந்த வளர்ப்புமகன் திருமணத்தில் ஓரமாக அவர் நின்றதும் அப்படியே இறந்தும் போனதும், இது தமிழக பெரும் சாபம்.
ஆசிய ஆப்ரிக்க படவிழாவில் அவன் கொண்டாடபட்டான், அமெரிக்காவில் ஒருநாள் மேயராக அமரவைக்கபட்டான், சோவியத் யூனியன் அவனை உலகின் மிகசிறந்த கலைஞரில் ஒருவன் என்றது.
அன்றைய உலகின் நடிப்பு சக்கரவர்த்தி மார்லன் பிராண்டோ வாய்விட்டு சொன்னான் “என்னை போல அவன் எளிதாக நடித்துவிடுவானே அன்றி, அவனை போல நடிக்க என்னால் ஒருபோதும் நடிகக்க முடியாது”
அப்படிபட்ட கலைஞனுக்கு மத்திய அரசு பெரும் விருதுகள் ஒன்றையும் அளிக்கவில்லை, ரிக்ஷாகாரன் படத்தில் எம்ஜிஆரின் சிறப்புமிக்க நடிப்பிற்காக ஒரு விருது வழங்கியது, அந்த படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் ஏன் கொடுத்தார்கள் என இன்றுவரை விளங்காது
உதட்டை சரித்து கொண்டு ஆஆஆ.. என இறுதிவரை முகத்தை காட்டினார் எம்ஜிஆர், மஞ்சுளா வரும் காட்சியில் மட்டும் முகம் மாறிற்று, மற்றபடி அது ஆஆஆ.. அந்த விருது வழங்கிய அதிகாரிகள் ரசனை அப்படி இருந்திருக்கின்றது
அன்று பாழாய் போயிருந்த பாரத நாட்டில் எல்லாம் அரசியல்.
சிவாஜிகணேசனுக்கு அப்படியான விருதுகள் எல்லாம் இல்லை, பின்னாளில் பால்கே விருது வழங்கினார்கள், அது எப்பொழுது பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கிய பின் பிரான்ஸ் தூதரகம் சிரிக்கும் முன் வழங்கினார்கள்,
இது அரசியல், விட்டுவிடுங்கள்
பராசக்தி முதல் முதல்மரியாதை வரை அவர் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. எத்தனை எத்தனை வேடங்கள் எத்தனை அற்புதமான நடிப்பு?
ஸ்டைல் எனப்பதும் ஒருவித தனித்துவத்திலும் அவர்தான் முன்னோடி, கவனித்துபார்த்தால் ரஜினி எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும். ஆலயமணி, திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்களில் நடையிலே பல நடை காட்டியவன்
அட நடை என்ன நடை சிகரெட் குடிப்பதிலே பல ஸ்டைல் காட்டினான், அதுதான் கிளாசிக். அந்த பலவகை வசன உச்சரிப்பிற்கும் அவர்தான் இலக்கணம்.
மிகசிறந்த வில்லன் நடிகரும் கூட, அந்நநாள் எனும் படத்தினை விடுங்கள், பாசமலரிலும், ஆலயமணியிலும் வந்துபோகும் சிலநொடி வில்லத்தனமான முகம் நம்பியார் அப்பட்டமாக தோற்குமிடம்.
இன்று என்னமோ நடிகர் நடிகைகளுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜி என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆனால் மிக்சிறந்த கெமிஸ்ட்ரி இருந்தது என்றால் அது சிவாஜிக்கும் பத்மினிக்குமான கெமிஸ்ட்ரி. ஹிஸ்டாரிக்கல் கெமிஸ்ட்ரி
இந்த இருவருமே இன்று இல்லை.
மகா திறமையான நடிகன். ஆனால் ஒரு வட்டத்திற்குள் அடைத்துகொண்டது தமிழ் திரையுலகம். அதுதான் இங்குள்ள பெரும் சிக்கல். ரஜினி தவிப்பதும், கமல் கை பிசைவதும் அப்படித்தான். அதாவது உனக்கு இதுதான் பாதை, இப்படித்தான் நீ நடிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான் எனும் மாதிரியான நிலை
அப்படித்தான் உருக்கமான பாத்திரங்களில் நடித்த சிவாஜி பின்னாளில் சிக்கிகொண்டார். இதனை கேரள இயக்குநர் ஒருவன் சொன்னான்
“சிவாஜி எனும் யானையினை பட்டினி போட்டு கொன்ற பாவம் ஒருநாளும் தமிழக திரையுலகினை விடாது”
இதனைத்தான் அவன் இறந்த அன்று உலகமே சொல்லிற்று
ஆயிரம் கவிஞர்கள் தமிழில் இருந்தாலும் கம்பனின் இடம் என்றுமே நம்பர் 1. அவனின் வர்ணனைகள் அப்படியானவை, தமிழுக்கோர் அடையாளம் அது, அழகு அது.
கம்பனின் இடம் அப்படியானது
தமிழ் உள்ள காலம் வரை கம்பன் நிற்பது போல, தமிழ்திரை உள்ள காலம் வரை சிவாஜி கணேசன் நிலைத்து நிற்பார் தலைமுறைகளை தாண்டி.
காலங்கள் மாற மாற ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் மாறும் மகனாக அண்ணனாக இருந்த வாழ்வு , மாணவனாக, பணி செய்பவனாக, காதலனாக கணவனாக தகப்பனாக தாத்தாவாக மாறிகொண்டே இருக்கும்
வாழ்வின் சூழலும் குதூகலம், சிரிப்பு, கொண்டாட்டம், அழுகை,துரோகம், வலி, கண்ணீர், விரக்தி ,பிரிவு, மகிழ்ச்சி என மாறி கொண்டே இருக்கும்
அந்த ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு சிவாஜிகணேசன் படம் உங்களுக்கு பிடிக்கும், ஆம் கவனித்து பாருங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் அவர் உங்கள் கண்முன் உங்களையே நிறுத்துவார்
அதுதான் அந்த நடிகனின் மகா உன்னத வெற்றி
கருணாநிதியின் வசனம் குறை சொல்லமுடியாதது ஆனால் அவர் எழுதிய 80 படங்களில் நிலைத்தது எது?
பராசக்தியும் மனோகராவுமே. ஆம் சிவாஜி இல்லையென்றால் பராசக்தி என்பது பத்தோடு பதினொன்றாகியிருக்கும், பின்னாளில் கருணாநிதியின் பகுத்தறிவு வசனங்கள் நிலைக்காமல் போனதற்கு அதுதான் காரணம்
பராசக்தியின் வெற்றி சிவாஜியின் வெற்றி.. ஆம், பராசக்தியும் மனோகராவும் கருணாநிதி கதை அல்ல, அவை நாடக கதைகள், சிவாஜி நாடகமாய் நடித்து நடித்து வளர்ந்த கதைகள்
இதனால் மிக எளிதாக அந்த பாத்திரத்தில் அசத்தினார், தங்கபதக்கம் வரை அப்படி நாடக கதைகளே
மகாகவி காளிதாஸ் படமெல்ல்லாம் முற்பாதியிலும் பிற்பாதியிலும் ஒரே நடிகனா எனும் வியக்கும் அளவுக்கு நேர்த்தி
பாசமலரில் காட்டிய முகபாவமும் உடல்மொழியும் இன்னொரு நடிகனுக்கு சாத்தியமில்லை, கட்டபொம்மன் பட பிசிறில்லா வசனமும், கவுரவம் ஆண்டவன் கட்டளை போன்றவற்றின் அந்த நளினனும் இன்னொரு நடிகனுக்கு சாத்தியமில்லை.
கடவுள் வேடங்களில் அவன் நின்ற அளவு இன்னொரு தெய்வீக கம்பீரம் இன்னொருவனுக்கு வராது
பல படங்களில் அவரின் வெடம் மறுபடி மறுபடி ரிபீட் ஆனது , பாசமலரின் அண்ணன் வேடமே படிக்காதவனில் வந்தது, படிக்காத மேதையில் வீட்டைவிட்டு விரட்டபட்டது போல படையப்பாவிலும் விரட்டபடுவார்
ஆனால் அந்த நடிப்பு மறுபடிவராமல் நுண்ணிய தனித்துவம் காட்டினார், அதுதான் நடிப்பு அவன் தான் நடிகன்..
இப்படி தன் நடித்த பாத்திரத்தையே பலமுறை திரும்ப திரும்ப வெவ்வேறு பாணியில் நடித்து அசத்தியவர் அவர், செய்ததை அப்படியே திரும்ப செய்யும் அந்த சலிப்போ, ஆணவமோ , கர்வமோ அவரிடம் இருந்ததில்லை
இதுதான் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய உன்னத குணம் , அது அவருக்கு இருந்தது.
அந்த காளிதாசன் பாத்திரத்தில் சிவாஜி சொல்வார்..
“பொன்னல்ல பொருளல்ல புவியாளும் மன்னர்தரும் எண்ணவிலா மரியாதை எதுவுமல்ல மின்னிவரும் மெய்கவியின் சொல்லழகை காண்போர்தம் கண்ணில் வரும் ஒரு துளியே கவிஞனுக்கு பல கோடி..”
ஆம் ஒரு கலைஞன் என்பவன், அவன் எழுத்தாளனோ நடிகனோ பாடகனோ இசைவித்வானோ எவனாக இருந்தாலும் அவன் பணத்துக்காக ஏங்குபவன் அல்ல, புகழுக்காகவும் திரிபவன் அல்ல
அவன் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு அங்கீகாரம், அவன் மனதில் ஊறும் வித்தைக்கான அங்கீகாரம், தன் கலைபடைப்பை அணு அணுவாக ரசிப்பவர் ஒன்றையே அவன் விரும்புவான்
கலைஞனின் கலையினை ரசிக்கும் ரசிகன் கொடுக்கும் ஒரு துளி ஆனந்த பிரவாக கண்ணீர் அவனுக்கு பல்லாயிரம் கோடிக்கு சமம்
எந்த கலைஞன் ரசிகனை உருக்குகின்றானோ தன் கலையால் கட்டிபோடு அழவைக்கின்றானோ அவனே மகா உன்னத கலைஞன்
அவ்வகையில் சிவாஜிகணேசன் எல்லா தலைமுறையும் ரசித்துகொண்டே இருக்கும் மகா உன்னத கலைஞன், என்றும் அவன் படத்தை காண்போர் ஒரு துளி கண்ணீர் சிந்தி கைதட்டிவிட்டு எழாமல் இருக்க முடியாது
அவரின் பாத்திரங்களில் தெரிவதெல்லாம் வாழ்வில் நாம் கண்ட மனிதர்கள், இம்மண்ணில் நடமாடிய மன்னர்கள், தவரிஷிகள், மகான்கள், நாட்டு பற்றாளர்கள் அல்லது குடும்பத்தில் ஒருவரின் மிகபெரியவரின் இடம்
அதை மிக துல்லியமாக நம் முன் கொடுத்தார் அந்த கணேசன்
இன்று அந்த மனா உன்னத கலைஞனுக்கு புறந்த நாள், தமிழ் நாடக உலகம் இருக்கும் வரை அவன் வாழ்வான்.
நாடகதமிழ் என ஒரு தமிழை ஏன் கொண்டாடியது என்பதற்கு கண்கண்ட, வரலாறு கண்ட, முக்கால சாட்சி சிவாஜி கணேசனின் தமிழ்.
ஒரு வகையில் அவர் கைராசிகாரர், அவர் யாரையெல்லாம் வாழ்த்தினாரோ அவர்களெல்லாம் அரசியலில் உச்சம் தொட்டார்கள்
கருணாநிதி அவரால் அடையாளம் பெற்றார், ராம்சந்திரனிடம் “அண்ணே.. உங்களுக்கு எதுக்குண்ணே வசனம், வாள் சண்டை ஒன்றாலே உலகத்தையே ஜெயிப்பீங்கண்ணே” என சொன்னதும் அவரே
ஜெயாவின் முதல் நாட்டிய அரங்கேற்றத்தில் தலமையேற்று ” நீ பெரிய ஆளா வருவம்மா…” என வாழ்த்தியவர் இதே சிவாஜிகணேசன்
ஆனால் அவர்கலெல்லாம் வானம் போல் ஜொலிக்க, சிவாஜி மட்டும் நிலவாய் தேய்ந்தார்
எந்நிலை என்றாலும் கடைசிவரை தேசியவாதியாய் நின்ற அந்த பெருமகனை மறக்க முடியாது..
அவன் நடிப்பில் 100ல் ஒருபங்கு கூட நடிக்க தெரியாத, அவன் தமிழில் 1000ல் ஒரு பங்கு கூட பேச தெரியாதவரெல்லாம் அரசியலில் நடித்த ஒரே காரணத்துக்காய் 4 பேர் மெரினாவில் உறங்குவதும், அரசியலில் நடிக்க தெரியா அந்த நடிகனுக்கு அடையாளம் இல்லாமல் போனதும் தமிழகத்து சாபங்கள்.
கட்டுரை: எழுத்தாளர் ஸ்டாலின் ராஜன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















