தமிழகத்தில் பாஜக இளைஞரணி களத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மோடி அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதல் திமுகவின் முகத்திரையை கிழித்து மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்வது வரை பாஜக இளைஞரணி பம்பரமாக சுழன்று வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு வினோதமான அரசியல் களம் அமைந்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவுக்கும், முக்கிய எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே நடக்கவேண்டிய கருத்து மோதல்கள், எதிர்க்கட்சியான திமுகவுக்கும், பாஜக இளைஞர் அணிக்கும் இடையே நடந்து வருகிறது.
சமீபத்தில் மத்திய மோடி அரசு விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இடைத்தரகர்கள் இன்றி விளைபொருள்களை விவசாயிகளே சந்தைப்படுத்துவது, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் ஒரு விவசாயி தனது விளைபொருட்களை கொண்டு சென்று நல்ல விலைக்கு இருக்கும் சுதந்திரம், யாருக்கு வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெறும் வசதி, விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயம் செய்வது, ஆன்லைன் சந்தை வசதிகள் போன்ற ஏராளமான சிறப்பு அம்சங்கள் புதிய வேளாண் சட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த சட்டங்களை உள்நோக்கத்தோடு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்மூடித்தனமாக எதிர்த்து வருகிறார். திமுகவின் கூட்டணி கட்சிகளும், கூட்டணி தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள், 2016 ஆண்டு திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் தனது ட்விட்டர் பதிவு மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
இது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்தது. அதோடு சமூக வலைத்தளங்களில் இது வேகமாக பகிரப்பட்டது.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் திமுக தரப்பு திண்டாடியது. அதோடு நில்லாமல் பாஜக இளைஞரணி சார்பில் திமுக இதுவரை விவசாயிகளுக்கு செய்த அடுக்கடுக்கான துரோகங்களையும் தோலுரித்து காட்டும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. இதுவும் பொதுமக்களிடம் பேராதரவை பெற்றது.
இதுபோல திராவிட பெருஞ்சுவர் என்ற பெயரில் திமுக சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் “திராவிடர் பெருஞ்சுவரின் உண்மை வரலாறு” என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் திமுக தோன்றிய வரலாறும், திமுக தலைவர் பதவியை கருணாநிதி எப்படி ஆக்கிரமித்தார் என்பதுவும், பின்னர் அது எப்படி மு.க.ஸ்டாலினின் குடும்ப நிறுவனமாக மாற்றப்பட்டது போன்ற உண்மை வரலாறுகளை புட்டு புட்டு வைத்தனர்.
பாஜக இளைஞரணி சார்பில் வெளியிடப்படும் இதுபோன்ற கருத்துக்களுக்கு, பதில் சொல்ல முடியாமல் திமுக விழிபிதுங்கி நிற்கிறது.
இதுவரை தமிழகத்திலுள்ள பெரும்பாலான பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்றவைகளை தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடும் ஊடகங்களாக திமுக பயன்படுத்தி வந்தது.
ஆனால் பாஜக இளைஞர் அணியினர் சமூக வலைதளங்களின் மூலம் ஒருபுறம் திமுகவின் பொய் பிரச்சாரத்தை தோலுரித்து காட்டுகின்றனர். மறுபுறம் உண்மை தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர். இது திமுகவிற்கு எதிர்பாராத சரிவை ஏற்படுத்தி உள்ளது.
அதுபோல திமுகவில் உள்ள ஏராளமான இளைஞர்கள் பாஜக இளைஞர் அணியில் தினந்தோறும் இணைந்த வண்ணம் உள்ளனர். எனவே களத்திலும் திமுகவிற்கு சரியான போட்டியை பாஜக இளைஞரணி ஏற்படுத்தி வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை.
எனவேதான் ஆளும் கட்சியான அதிமுகவைவிட பாஜக இளைஞர் அணியை எதிர்கொள்வது திமுகவிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த பாஜக இளைஞரணி தேசிய செயற்குழு கூட்டத்தில், பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, தமிழக பாஜக இளைஞரணியையும், அதன் தலைவர் வினோஜ் ப செல்வத்தையும் வெகுவாக பாராட்டிப் பேசினார்.
அவர் பேசும்போது, “தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி” என்று தமிழில் கூறி அனைவரையும் அதிர வைத்தார்.
தேஜஸ்வி சூர்யா மேலும் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜக இதுவரை ஆட்சியில் இல்லை. அப்படி இருந்தும் தமிழகத்தில் பாஜக இளைஞரணி முதலிடத்தில் உள்ளது. களத்திலும் சரி, சமூக வலைத் தளங்களிலும் சரி பாஜக இளைஞரணி கடுமையாக உழைத்து வருகிறது. வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜக இளைஞரணிதான் மிகப்பெரிய மாற்று சக்தியாக வரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இந்த அளவிற்கு தமிழகத்தில் பாஜக இளைஞர் அணியை பலப்படுத்துவதில், பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அவரின் கடுமையான உழைப்பிற்கு பலன் கிடைத்து உள்ளது. எனவே தமிழக பாஜக இளைஞரணிக்கும், வினோஜ் ப செல்வத்திற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா கூறினார்.
தமிழக பாஜக இளைஞரணியையும், அதன் தலைவர் வினோஜ் ப செல்வத்தையும், பாஜக இளைஞரணி தேசிய தலைவர் செயற்குழு கூட்டத்தில் வெகுவாக பாராட்டி பேசியது தமிழக பாஜக இளைஞரணி புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
=====
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















