ஸ்டெர்லைட் விஷயமாக EPS ஸ்டாலினிடையே நடைபெற்று வரும் சொற்போரை கவனித்து வருகிறேன்
இது குறித்த விவரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முடிவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்
ஸ்டெர்லைட் ஆலை எப்போது செயல்படத் தொடங்கியது?
1996ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வரியம் அதற்கு ஆலையை இயக்க உரிமம் வழங்கியது ( licence to operate)
அப்போது தமிழ்நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சர் யார்?
1996ஆம் ஆண்டு மே மாதம் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது. சுற்றுச் சூழல் துறை முதலமைச்சர் கருணாநிதியின் வசம் இருந்தது. சுற்றுச் சூழல் தவிர மாசுக்கட்டுப்பாடு என்றொரு துறை பொங்கலூர் பழனிச்சாமியின் பொறுப்பில் இருந்தது
ஜெயலலிதாதான் ஸ்டர்லைட்டைக் கொண்டுவந்தார் எனச் சொல்லப்படுகிறதே?
1994 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழ் நாட்டில் ஆலை தொடங்க விண்ணப்பித்தது அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சில நிபந்தனைகளுடன் கட்டிடம் கட்ட தடையில்லா சான்றிதழ் வழங்கியது
என்ன நிபந்தனைகள்?
சுற்றுச் சூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு ( Environmental Impact Assessment (EIA).) செய்யப்பட வேண்டும். மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கீ.மீ. தள்ளி ஆலை அமைக்கப்பட வேண்டும்
அவை பின்பற்றப்பட்டதா?
1995ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை Environmental Impact Assessment (EIA).) இல்லாமலே அனுமதி அளித்தது.
அப்போது யார் மத்திய அரசில் இருந்தது யார்?
காங்கிரஸ். நரசிம்மராவ் பிரதமராக இருந்தார்
வளைகுடாவிலிருந்து 25 கீ.மீ. தள்ளி ஆலை அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை என்ன ஆயிற்று?
1996ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி திமுக அரசு உரிமம அளித்த போது அந்த நிபந்தனையைப் பொருட்படுத்தவே இல்லை. ஆலை 14 கீ,மீல் அமைந்திருந்த போதும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. 25 கீ.மீ. நிபந்தனைக்கு பதில் 25 மீட்டருக்கு பசுமை ப் பட்டி (greenbelt) அமைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது
இப்படி உரிமம் அளிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் காவல்துறை கொண்டு அடக்கப்பட்டன
ஸ்டெர்லைட் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றியதா?
இல்லை என்று நீரி (National Environmental Engineering Research Institute (NEERI) 1998ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்நீதி மன்றத்தில் சமர்பித்த அறிக்கை தெரிவிக்கிறது. அதனால் அதே ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி ஆலையை மூட முதல் முறையாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
முதல் முறையாக என்றால்?
1998லிருந்து வழக்கு உயர்நீதி மன்றம் உச்ச நீதி மன்றம் என்று நீதிமன்றத்தின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஓரிரு முறை ஆலையை மூட உயர்நீதி மன்றம் ஆணையிட்டதுண்டு. இந்த காலகட்டத்தில் மத்தியில் இருந்த சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி ஸ்டர்லைட் நிறுவனத்தைக் காப்பாற்றி ஆலையைத் திறக்க உதவியது. உதாரணமாக விதித்த நிபந்தனைகளின் பேரில் ஆலை கட்டப்படவில்லை என்பதால் செயல்பட உரிமம் வழங்கப்பட மாட்டாது என 2005ஆம் ஆண்டு தமிழக அரசு (ஜெயலலிதா முதல்வர்) அனுமதி மறுத்த போது, 2005 ஏப்ரல் 5 ஆம் தேதி செயல்பட உரிமம் வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதியது
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது யார்?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி .மன்மோகன் சிங் பிரதமர். சுற்றுச் சூழல் துறை அவர் பொறுப்பில் இருந்தது.. அந்தத் துறையின் இணை அமைச்சராக திமுகவின் ரகுபதி இருந்தார்
தலைப்பில் வைகோவைக் குறிப்பிட்டிருகிறீர்கள். அவர் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?
இந்த விஷயம் குறித்து முழுமையாக அறிந்தவர் வைகோ. இது குறித்து நீதிமன்றங்களில் வழக்காடி ஆலையை மூடியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவர் முதல்வர் – எதிர்க்கட்சித் தலைவரிடையே நடக்கும் சொற்போரில் குறுக்கிட்டு யார் யார் /எந்தக் கட்சிகள் எந்தெந்த காலத்தில் ஸ்டர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்துன என்ற விவரங்களை வெளியிட்டுப் பேச வேண்டும். குறைந்தது அவர் 24.2.1997 அன்று நடத்திய மறியல் எந்த ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்டது என்ற உண்மையை உரைக்க வேண்டும்.
செய்வாரா?
கட்டுரை :- எழுத்தாளர் மாலன்