ஒரு வழியாக அரசியலுக்கு வந்துவிட்டார் ரஜினி, ஒரு வகையில் இது பதுங்கி பாயும் தந்திரம் சரியாக தேர்தல் வரும் நேரம் பாயும் ஒரு வியூகம், அதை சரியாக செய்கின்றார் ரஜினி.
ஒரு வழியாக புலி வந்தே விட்டது.
ஆக இந்த தேர்தல் ஒருவித பலத்த எதிர்பார்ப்பு அல்லது ஒருவிதமான குழப்பத்தில் தமிழ்நாட்டை இழுத்து விடுகின்றது
நிச்சயம் பெரும் மாற்றத்தை கொடுக்கும், தகுந்த தலமை இன்றி திணறும் திமுகவுக்கு ரஜினி பெரும் மிரட்டலாக இருப்பார்,
அதிமுகவில் ஏற்கனவே ரஜினிக்கு மனமார்ந்த ரகசிய ரசிகர்கள் இன்றைய அமைச்சர் அளவில் உண்டு.
இதனால் ஒரு பெரும் புயல் போல் அவரால் இங்கு பலத்த அதிர்வினை கொடுக்க முடியும்
ரஜினி தனியாக நிற்பாரா இல்லை தகுந்த கூட்டணியுடன் வந்து இந்து தேசியம் மலர முதல் கல்லை நட்டு வைப்பாரா என்பதற்கெல்லாம் காலமே பதில் சொல்ல வேண்டும்.
இனி பரபரப்பு காட்சிகள் ஆரம்பிக்கலாம்
எது எப்படியாயினும் அண்ணாத்த படம் பாஷா அளவு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என இப்பொழுதே சொல்லிவிடலாம்.
ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு ஆனந்த கண்ணீர் வந்தாலும் ஒரு சிலருக்கு விசித்திரமான புன்னகையும் வருகின்றது
ஆம் ரஜினி டிசம்பர் 31 என சொன்னாரே அன்றி எந்த வருடம் என சொல்லவே இல்லை, ஏன் என்றால் அதுதான் ரஜினி
ரஜினி வந்தால் நிச்சயம் அரசியலுக்கு நல்லதுதான் ஆனால் வராமல் இருந்தால் அவருக்கு நல்லது.
ஆம் அரசியல் என்பது ஒரு முள்வயல் அங்கு மானம் வெட்கம் என எதுவும் இருக்க கூடாது, ஆத்திரம் கோபம் என எதுவும் வரகூடாது, அடிக்கடி பல்டி அடிக்க வேண்டும் இன்னும் பல சாகசங்களையெல்லாம் மனசாட்சியினை கழற்றி வைத்து செய்ய வேண்டும்
ரஜினி அதற்கு சரிவரமாட்டார்,
ஆனால் திராவிட பிரிவினைவாதம் ஒழிந்து, நாத்திக இம்சை அரசியல் ஒழிந்து தேசியம் மலர அவர் ஒரு நல்ல வழியினை நல்ல தலமை மூலம் காட்டிவிடலாம், அந்த அதிசயம் நடக்கலாம்,
அதைத்தான் தமிழகம் எதிர்பார்க்கின்றது.
ரஜினியின் முடிவு வரவேற்கதக்கது எனினும் டிசம்பர் 31ம் தேதிக்கு பின்புதான் உறுதியாக தெரியும் என்றாலும் அவரின் அறிவிப்பினை வாழ்த்தி வரவேற்போம்.
இங்கு தெய்வீகமும் தேசியமும் வளரவேண்டும் என் விரும்பிய செட்டிநாட்டு கவி ஒருவன் அன்றே ரஜினிக்கு பாடல் எழுதினான் இப்படி
அதை சொல்லி வரவேற்கலாம்..
“ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் (மோடி) உண்டு
நல்லுறவுமுண்டு அதில் பரிவுமுண்டு அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும் தெய்வத்தில் உன்னைக் கண்டோம்
தினம் தினம் பூஜை செய்தோம் நிலவுக்கு களங்கம் என்றோ
கடமையில் விலகி நின்றாய்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ உலகில் உனக்கு சரித்திரம் உண்டு”