கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தாய்மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்களின் தியாகம், உலகம் உள்ளவரை போற்றப்படும். தமிழக மக்களை பாதிக்கும் எந்தவித திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தாது. முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு அரசு தீர்வு கண்டுள்ளது. மனுக்களை நிராகரித்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இதுவரை 5.27 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்கள் கிராம சபைக்கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் கூட்டும் கூட்டங்களைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவது எதற்காக? ஏற்கனவே பெற்ற மனுக்களை ஸ்டாலின் என்ன செய்தார்? மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும். ஸ்டாலின் கவர்ச்சியாக பேசி பொதுமக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு 234 தொகுதிகளில் திமுக பெற்றிப் பெறும் என அறிவித்தார். அடுத்த சில நாட்களில் 200 இடங்களில் வெற்றிப்பெறும் என்றார். இப்படியாக படிப்படியாக குறைந்து அடுத்த வாரத்தில் 100 தொகுதி என்பார். ஆனால், தேர்தலின் முடிவில் திமுக வெறும் 34 தொகுதிகளில் தான் வெற்றிப்பெறும். இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான். அப்படியிருக்கையில் ஊழல் குறித்து திமுக.,வினர் பேசலாமா? குடும்பக் கட்சியான திமுக நாட்டை ஆள வேண்டுமா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.