கொவிட் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளை அனுப்பும் படி பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ரயில்வேயிடம் கொவிட் சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்ட 4000 ரயில் பெட்டிகள் 64,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளன.
9 ரயில் நிலையங்களுக்கு 2670 படுக்கை வசதிகளுடன் கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
மொத்தம் 81 பேர், கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எங்கும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
தில்லி, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 9 ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளின் விவரம்:
தில்லியில் மாநில அரசின் தேவையை ரயில்வே முழு அளவில் நிறைவேற்றி வருகிறது. இங்கு 1200 படுக்கை வசதிகளுடன் 75 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 50 ரயில் பெட்டிகள் சகுர் பஸ்தி ரயில் நிலையத்திலும், 25 ரயில் பெட்டிகள் ஆனந்த் விகார் ரயில் நிலையத்திலும் உள்ளன. தற்போது சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் 5 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்தாண்டு கொவிட் முதல் அலையின் போது, சகுர்பஸ்தி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொவிட் சிகிச்சை பெட்டிகளில் 857 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
மத்தியப் பிரதேசம் போபாலில், 292 படுக்கை வசதிகளுடன் 20 கொவிட் சிகிச்சை பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது இங்கு 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா நந்த்ரூபரில் 292 படுக்கை வசதிகளுடன் 24 பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 73 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய 2வது அலையில் மட்டும் 55 பேர் அனுமதிக்கப்பட்டு, 7 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 4 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
உத்திரப் பிரதேச அரசு எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்றாலும், இங்கு பைசாபாத், பதோகி, வாரணாசி, பரேலி மற்றும் நசிபாபாத் ஆகிய இடங்களில் தலா 10 கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 800 படுக்கை வசதிகள் உள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















