தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.ஏனென்றால் கொரோனாவை கையாளுவதில் திமுக அரசு தடுமாறிவருகிறது. இதனால் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு.
அங்கங்கே அழுகுரல் தான் தமிழகம் முழுவதும். மயானங்களில் இடமில்லை.. மருத்துவமனைகளில் இடமில்லை என தத்தளிக்கிறது தமிழகம். கொரோனா யாரையும் விட்டு வைப்பதில்லை. முதல் அலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் ஆனால் தற்போது 45 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
தினம் தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருவது மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் 4000 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளார்கள்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதே ஆன கொரோனா நோயாளி, ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல், 4 மணி நேரமாக ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் 7444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் அங்கு வெறும் 1438 ஆக்ஸிஜன் படுக்கை வசதி தான் உள்ளது. இதனால் ஆக்ஸிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்தவர் பிரேம் குமார் இவருக்கு வயது 34 கடந்த வாரம் கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் கிச்சை பெற்று வந்தார் அவருக்கு ஆக்சிஜன் வழங்க இயலாத நிலை ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது.
பின் அரசு மருத்துவமனைக்கு காலை 8 மணியில் இருந்து ஆக்சிஜன் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த பிரேம் குமார் மூச்சுவிட இயலாமல் தவித்து வந்தார். அதே போல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முன் ஏராளமானோர் ஆக்சிஜன் படுக்கைக்கு காத்திருந்ததால் பிரேம் குமாருக்கு படுக்கை கிடைக்கவில்லை
இந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்து விட்டதால் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது மரணத்துடன் போரிட்ட 34 வயது ஆன இளைஞர் பிரேம்குமார் ஆம்புலன்சிலேயே மூச்சுத்திணறி உயிர் பறிபோனது.
பிரேம்குமார் மட்டுமல்ல பல நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மூச்சுத்திணறி பலியாவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதி அமைத்துக் கொடுக்க சுகாதாரதுறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.