கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மற்றும் தற்போது பயமுறுத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்றைக் கருத்தில் கொண்டு மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி(தன்னாட்சி) சார்பில் “கோவிட்-19 மற்றும் கருப்பு பூஞ்சை – ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மதுரை கிரேஸ் கென்னட் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் மருத்துவ மேலதிகாரி டாக்டர் கேப்டன் அகஸ்டஸ் சாமுவேல் டாட் கலந்துகொண்டு பேசியது:- கொரோனா வைரஸின் முட்பகுதியான புரோட்டீன் ஸ்பைக், ஆன்டிஜென், ஆன்டிபாடி, தனிநபர் நோய் எதிர்ப்பு சக்தி, சமுதாயத்தின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து விளக்கமளித்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமலும் மிகாமல் உத்தமமாக இருக்க வேண்டும் என்றும் சமுதாயத்தில் குறைந்தது ஐம்பது சதவீதம் பேருக்காவது தனிநபர் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்தான் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்று பரவாது என்றும் எடுத்துக்கூறி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
கொரோனாவை வெற்றிகொள்ள நமக்கிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசி வைரஸ் சார்ந்த ஸ்பைக் மற்றும் மெசஞ்சர் ஆர்.என்.ஏ. என்ற இரண்டு தொழில்நுட்பங்கள் மூலமாக தயாரிப்படுகிறது. மேலும் தன்னுடைய அனுபவத்தில், ஒருமுறை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவையோ அல்லது உயிரிழப்போ மிகக்குறைவாக உள்ளது என்றார்.
கருப்பு பூஞ்சை குறித்து பேசிய அவர் இது இல்லாத இடமே கிடையாது என்றார். கெட்டுப்போன ரொட்டித்துண்டு மற்றும் மாம்பழம் போன்றவற்றில் பூஞ்சை இருப்பதை நாம் கண்ணால் பார்க்க முடிகிறது. ஏன் நாம் உண்ணும் காளான் கூட ஒரு வகை பூஞ்சை தான் என்றார். கருப்பு பூஞ்சையில் இரண்டு வகைகள் இருப்பதாகவும் ஒன்று மூக்கின் வழியாக நுழைந்து சைனஸ், கண்கள் மற்றும் மூளை வரை பாதிப்பதாகவும் மற்றொன்று நுரையீரலை பதிப்பதாகவும் கூறினார்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரை அதிகமாக எடுத்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், அதிக நாட்களாக கேன்சர் நோய்க்கு மாத்திரை எடுத்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், மாற்று அறுவை சிகிக்சை செய்து இனைநோய்கள் உள்ளவர்களுக்கும் இப்பூஞ்சை தாக்க அதிகம் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலமாக இப்பூஞ்சை தொற்று சரிசெய்யப்படுகிறது என்றும் மருத்துவ சிகிச்சையில் பூஞ்சை எதிர்ப்பு மருந்து கொடுத்து சரிசெய்யப்படுகிறது இதற்கு மாதக்கணக்கில் மருந்து எடுக்க வேண்டியிருக்கும். எனவே தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றார். மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற்றோர் எழுப்பிய ஏராளமான கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கமளித்து பதிலளித்தார்.
நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சென்னை மற்றும் புதுச்சேரி மாநில மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் ஜெ.காமராஜ், பேசியதாவது; நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் மனதை ஒருமுகப்படுத்தி எந்த அளவுக்கு திறம்பட செயல்படுகிறார்களோ அதுவே நாட்டின் தலையெழுத்தாக அமைகிறது. கொரோனா இரண்டாவது அலையில் இளைஞர்கள் மரணத்தை தழுவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது துரதிஷ்டமான விஷயம். மரணம் என்பது சோகமான விஷயம் என்றாலும் அது நம்முடைய அலட்சியத்தால், கவனமில்லாத தன்மையால், அறிவியல் தன்மை அற்றுப்போய்விட்டதால் ஏற்படுவது ஏற்றுக்கொள்வதாக இல்லை. இங்கே படித்தவர்கள் 80 சதவீதம் இருக்கின்ற சூழ்நிலையில், நாம் சாதித்தது என்னவென்று பார்த்தால் கொரோனா முதல் அலையிலும் மற்றும் இரண்டாவது அலையிலும் நாம் தோற்றுப்போய்விட்டோம்.
இரண்டாவது அலையில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் ஐம்பது சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் இதனால் அங்கு தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் 130 கோடி பேர் வாழக்கூடிய இந்தியாவில் வெறும் 20 கோடி பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே நாம் இரண்டாவது இடத்திலே உள்ளோம். ஆகையால் தடுப்பூசி போடாதவர்களை தெரு அளவிலே கண்டறிந்து அவர்களை தடுப்பூசி போடச்செய்வது நமது கடமையாகும். மேலும் இத்தொற்றின் காரணமாக கடந்த நாற்பது ஆண்டு கால அளவில் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சியில் நாம் கீழ்மை அடைந்திருக்கிறோம். மதுரையிலும் கிட்டதட்ட 65000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் தொடர்பான அதனை விஷயங்களும் stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது என்றார்.
திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலக கள விளம்பர அலுவலர் திரு கே.தேவி பத்மநாபன், இ.த.ப., நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் கலைக்கல்லூரி(தன்னாட்சி) முதல்வர் முனைவர் திருமதி சூ.வானதி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இறுதியில் நன்றி தெரிவித்தார் கள விளம்பர உதவியாளர் திரு வேல்முருகன்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், பல்வேறு என்.ஜி.ஓ. வை சார்ந்த களப்பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், மதுரை கிழக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் நேரு யுவ கேந்திராவை சார்ந்த இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜூம் மீட்டிங் மற்றும் யூ-டியூப் வாயிலாக பங்குபெற்றனர்.