லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே-வில் இருந்து 88 கி.மீ தொலைவில் உள்ள கியுங்கம் எனும் இடத்தில் 2021 ஜூன் 28 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், 6 மாநிலங்கள் & 23 யூனியன் பிரதேசங்களில் எல்லையோர சாலைகள் நிறுவனம் கட்டிய 63 பாலங்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
லடாக் துணை நிலை ஆளுநர் திரு ஆர் கே மாத்தூர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜம்யங்க் செரிங் நம்கியால், வடக்கு ராணுவ தள தலைமை தளபதி லெஃப்டினெண்ட் ஜெனரல் ஒய் கே ஜோஷி, எல்லையோர சாலைகள் நிறுவன தலைமை இயக்குநர் லெஃப்டினெண்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், இந்திய ராணுவம், எல்லையோர சாலைகள் நிறுவனம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், தொலைதூர இடங்களுக்கு, குறிப்பாக கொவிட் காலத்தில், இணைப்பை வழங்குவதற்கான எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் உறுதியை பாராட்டினார். “தொலைதூரத்தில் அணுகமுடியாத இடங்களில் இருக்கும் பல கிராமங்களுக்கு இந்த பாலங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு நிகழ்வின் போது சிறப்பான தீரத்தை வெளிப்படுத்திய இந்திய ராணுவத்தை பாராட்டிய பாதுகாப்பு அமைச்சர், கடமையின் போது உயிரிழந்த அஞ்சாநெஞ்சர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், “இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால், சீண்டப்பட்டால் தக்க பதிலடியை கொடுக்கும்,” என்றார். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.