’ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகப் போகின்றன; என்ன இன்னமும் ஒன்றுமே தொடங்கவில்லையே?’ என்று எண்ணிக் கொண்டிருந்தோம். நேற்று மதுரையில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள 900 கோடி இழப்பீட்டைச் சரிசெய்ய டிஜிட்டல் மீட்டர்களுக்குப் பதிலாக ’ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தப் போவதாக தெரிவித்துள்ளார். இப்போது தான் தமிழகமெங்கும் நிலவும் மின் தடைக்கு ”அணில்தான் காரணம்” என்ற அவரது சட்டமன்ற கருத்துக்கு ’மீம்ஸ்கள்’ மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியுள்ளன.
மின்வாரியத்தில் 900 கோடி இழப்புக்கு அந்தத் துறையில் நீண்ட காலமாக இருந்து வரக்கூடிய மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மிதமிஞ்சிய ஊழலே காரணம். தரமற்ற நிலக்கரிகளை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்வது, அதேபோன்று தரம் குறைவான டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி பயன்படுத்துவது; அதனால் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட எண்ணற்ற காரணங்கள் அதில் அடங்கும்.
கடந்த சில வருடங்களாகவே வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பயனாளர்களுக்கும் டிஜிட்டல் மீட்டர்களே பொருத்தப்பட்டுள்ளது. இப்போது திடீரென்று மின்சாரத் துறையில் ஏற்படும் 900 கோடி நஷ்டத்தைச் சரிசெய்ய டிஜிட்டல் மீட்டர்களுக்கு பதிலாக ’ஸ்மார்ட் மீட்டரை’ பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் மீட்டர் என்பதும் அது ஒரு டிஜிட்டல் மீட்டர் தான். அது 30 நிமிட இடைவெளியில் மின் பயனீட்டளவை பதிவு செய்து கொடுக்கும். டிஜிட்டல் மீட்டர் என்பதும் 30 நிமிட இடைவெளியில் மின் பயனீட்டளவை பதிவு செய்து கொடுக்கக் கூடியதே. இரண்டுக்கும் பெரிய அடிப்படை வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால், இதற்காக மீட்டர்களை மாற்றுவது என்றால் பல கோடிகள் வீண் செலவாகும்.
முல்லை – கோதண்டம் ஆகிய இருவரது நகைச்சுவை நிகழ்ச்சியில் செம்மறி ஆடு, வெள்ளாடு என மாற்றி மாற்றி இரண்டுக்கும் பொதுவானவைகளை தனித்தனியே பேசி குழப்புகின்ற ஒரு நகைச்சுவை உரையாடல் வரும். அது போன்றதுதான் ஸ்மார்ட் மீட்டர், ட்ஜிட்டல் மீட்டர் பற்றி இவர்கள் குழப்புவதும்.
குறிப்பாக டிரான்ஸ்பார்மர், நிலக்கரி, உதிரிப் பாகங்கள் வாங்குவதில் உள்ள ஊழலை ஒழித்து, அதன்பின் தேவைப்பட்டால் மட்டுமே மாற்ற வேண்டிய டிஜிட்டல் மீட்டார்களை இப்போது மாற்றுவது எவ்விதத்திலும் மின்வாரிய நட்டத்தைக் குறைக்காது. மாறாக அது மீட்டர் வாங்குவதில் புதிய ஊழலையும், நட்டத்தையும்தான் துவக்கி வைக்கும். டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















