நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் தூய்மையான நீர் வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜல் ஜீவன் இயக்கம், வெறும் 23 மாதங்களில் இந்தியாவில் உள்ள 1 லட்சம் கிராமங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்புகள் வழங்கி சாதனை படைத்துள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட போது நாட்டிலுள்ள 18.94 கோடி கிராமப்புற வீடுகளில் வெறும் 3.23 கோடி (18 சதவீதம்) வீடுகளுக்கே குழாய் இணைப்பு இருந்த நிலையில், கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு இடையிலும் கடந்த 23 மாதங்களில் 4.49 கோடி குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டதோடு, 50,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
7.72 கோடி (40.77 சதவீதம்) வீடுகளுக்கு தற்போது தண்ணீர் இணைப்புகள் கிடைத்துள்ளன. கோவா, தெலங்கானா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியவை கிராமப்புற வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்குவதில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன.
பிரதமரின் தாரகமந்திரமான ‘அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காவும், அனைவரின் நம்பிக்கையுடனும்’ என்பதை பின்பற்றி, எந்தவொரு கிராமத்திலும், யாரும் குழாய் குடிநீர் இணைப்பில்லாமல் இருக்கக்கூடாது என்று ஜல் ஜீவன் இயக்கம் பணியாற்றி வருகிறது. தற்சமயம், 71 மாவட்டங்களில், 824 வட்டங்களில், 50,309 கிராம பஞ்சாயத்துகளில், 1,00,275 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாய் இணைப்புகள் உள்ளன.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிதியை முறையாக பயன்படுத்துதல் மற்றும் சேவை வழங்கலுக்காக ஜல் ஜீவன் இயக்கம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. திட்டத்தின் முன்னேற்றம் குறித்து https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx எனும் இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம். தண்ணீரின் தரம், அளவு, தொடர் விநியோகம் ஆகியவற்றை கண்காணிக்க சென்சார் சார்ந்த ஐஓடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மாநிலங்களுடன் இணைந்து பணிபுரியும் ஜல்ஜீவன் இயக்கம், 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குறிப்பிட்ட தரத்தில், போதுமான அளவில் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்க செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.