ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையின் கீழ் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
மேக் இன் இந்தியா திட்டம் 2014ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டது. முதலீடுகளை ஏற்படுத்துவதற்காகவும், புத்தாக்கத்தை வளர்ப்பதற்காகவும், சிறந்த உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்காகவும், இந்தியாவை உற்பத்தி மற்றும் புத்தாக்க மையமாக மாற்றுவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டம் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டம் 2.0-ன் கீழ் 27 துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதலீட்டு வசதிகளை செய்யும் நடவடிக்கையின் கீழ், மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், மாநில அரசுகளும் இதற்கான உதவிகளை செய்கின்றன. முதலீட்டை ஈர்ப்பதற்கான நிகழ்ச்சிகள், உச்சிமாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியா கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் 81.72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அன்னிய நேரடி முதலீடை பதிவு செய்துள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்:
தொடக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மத்திய அரசின் முன்னணி திட்டமாகும். வலுவான பொருளாதார சூழலை உருவாக்கவும், புத்தாக்கத்தை வளர்ப்பதும் தான் இதன் நோக்கம். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் நிலையான பொருளாதார வளர்ச்சியையும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் சிறப்பம்சங்கள் இணைப்பு 1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கை, தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டில் 4504, 2019-ல் 8213, 2020ம் ஆண்டில் 8628, 2021ம் ஆண்டில் 4982, என மொத்தம் 26,327 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ( DPIIT) தெரிவித்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்:
ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலை வாய்ப்பில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 1096 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இவைகள் கடந்த 3 ஆண்டுகளில் செய்த ஏற்றுமதியின் மொத்த மதிப்பு ரூ.69, 415 கோடி.
கொவிட்-19 தொற்று, கம்பெனிகள் இணைப்பு, வியாபார மந்த நிலை, சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 336 நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து வெளியேறியுள்ளன.
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு:
2020-21ம் ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, 2019-20ம் ஆண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 17.37 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-20ம் ஆண்டு மற்றும் 2020-21ம் ஆண்டின் வேளாண் ஏற்றுமதியில் சரக்கு வாரியான விவரங்கள் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளன. 2019-20ம் ஆண்டில் 35157.55 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும், 2020-21ம் நிதியாண்டில் 41265.80 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள்:
தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்க, தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், பொருட்களின் தரநிலையை மேம்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. மத்திய அரசு தனது அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் 156 தயாரிப்புகளுக்கு, இந்திய தர நிர்ணய அலுவலகம் (பிஸ்) சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்கியது. உற்பத்தி துறைக்கு ஊக்கம் அளிக்க, அடுத்த 5 ஆண்டுகளில் 13 துறைகளில், ரூ1.97 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை பல அமைப்புகளுடன் இணைந்து உத்யோக் மந்தன் என்ற பெயரில் 2 மாத காலத்துக்கு தொடர் இணைய கருத்தரங்குகளை நடத்தியது. இதில் முக்கிய உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் தரம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர உள்நாட்டு பொருட்களை வாங்குவோம் என்ற பிரசாரத்தையும் மத்திய அரசு மேற்கொண்டது.