மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 11 பெண் அமைச்சர்களுக்கு தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி.வானதி சீனிவாசன் தலைமையில் பாராட்டு விழா பா.ஜ.க டெல்லி தலைமையகத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மீனாக்சி லேகி, அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட 7 பெண்கள் புதிதாக அமைச்சர் பதவியேற்றுள்ளனர்.
ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் ஆகியோருடன் சேர்த்து பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் முதல் ஆட்சியில், ஒன்பது பெண் அமைச்சர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற பாராட்டு விழா குறித்து வானதி சீனிவாசன் அவர்கள் கூறியுள்ளதாவது:
சமூக நீதி அமைச்சரவைதமிழக பட்டுச் சால்வை, இந்தி கவிதை, தாய்மொழி வரவேற்புவரலாற்று நிகழ்வாக மாறிய மத்திய பெண் அமைச்சர்களுக்கான பாராட்டு விழா ஜூலை 27 செவ்வாய்க்கிழமை இரவு என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக இருக்கப் போகிறது என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 7-7-2021 அன்று விரிவாக்கம் செய்தார். அதில் பட்டியலினத்தைச் சேர்ந்த 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பெண்கள் 11 பேர் இடம்பெற்றனர்.சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் சமூக, பாலின ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.
உண்மையிலேயே ‘சமூகநீதி அமைச்சரவை’ என்பது இன்றைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை தான்.மத்திய அமைச்சரவையில் 11 பெண்களுக்கு பிரதமர் மோடி வாய்ப்பளித்திருப்பது பாஜக மகளிரணி தேசியத் தலைவரான எனக்கு அளவிடா முடியாத மகிழ்ச்சி. மத்திய பெண் அமைச்சர்களை கெளரவிக்கும் வகையில் மகளிரணி சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று அவர்கள் பதவியேற்ற நாள் முதலே நினைத்துக் கொண்டிருந்தேன். அது நேற்றுதான் (ஜூலை 7) நனவானது.
இந்த விழாவுக்கு தலைமையேற்று பெண் அமைச்சர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று தேசியத் தலைவர் திரு. ஜெ.பி.நட்டா அவர்களை அழைத்தபோது, “நான் நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், மகளிரணி தேசியத் தலைவரான நீங்கள்தான் அவர்களை கெளரவிக்க வேண்டும்” என்றார். இந்த வார்த்தைகள் என்னை மிகவும் நெகிழச் செய்துவிட்டது. மிகமிகச் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்த நான் இன்று நாட்டை ஆளும் கட்சியின் மகளிரணி தேசியத் தலைவராக இருக்கிறேன். அதற்கு தேசியத் தலைமை கொடுக்கும் முக்கியத்துவம் பாஜக எப்படிப்பட்ட ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலமையகத்திலேயே மிக எளிமையாக மகளிரணி சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தேசியப் பொதுச்செயலாளரும், மகளிரணி பொறுப்பாளருமான துஷ்யந்த்குமார் கெளதம், மத்திய காபினட் அமைச்சர்கள்
நிர்மலா சீதாராமன் (நிதி), ஸ்மிருதி இரானி (பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்), மத்திய இணை அமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி (உணவு, பொது விநியோகம், ஊரக மேம்பாடு), ஷோபா கரன்ட்லஜே (வேளாண்மை, விவசாயிகள் நலன்), தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் (ஜவுளி, ரயில்வே), மீனாட்சி லேகி (வெளியுறவு, கலாச்சாரம்), ரேணுகாசிங் சருதா (பழங்குடியினர் நலன்), அன்னப்பூர்ணா தேவி (கல்வி), பிரதிமா பவுமிக் (சமூக நீதி, அதிகாரமளித்தல்), டாக்டர் பாரதி பிரவின் பவார் (சுகாதாரம், குடும்ப நலம்) ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
இது முழுக்க முழுக்க பாஜக நிகழ்ச்சி என்பதால் மத்திய இணை அமைச்சராகியுள்ள கூட்டணி கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா சிங் பட்டேல் அவர்களை (தொழில், வர்த்தகம்) நாங்கள் அழைக்கவில்லை. மற்ற 10 பெண் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
விழா மிக எளிமையாக சிறிய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அனைத்து அமைச்சர்களையும் மேடையில் அமர வைக்க முடியவில்லை. அதனால் ஜெ.பி.நட்டா, துஷ்யந்த்குமார் கெளதம், காபினட் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோருடன் மகளிரணித் தலைவரான நானும் மட்டுமே மேடையில் அமர முடிந்தது. மற்ற 8 மத்திய இணை அமைச்சர்களும் மேடைக்கு எதிரே முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
ஒரு மத்திய அமைச்சரை வரவழைத்து, நிகழ்ச்சி நடத்தி, அவருடன் படம் எடுப்பதே பெரிய சாதனையாக கருதப்பட்ட மாநிலத்தில் இருந்த வந்திருக்கும் நான் மேடையில் அமர்ந்திருக்க, எதிரே 8 மத்திய அமைச்சர்கள் அமர்ந்திருக்கின்றனர். யாராக இருந்தாலும் கட்சிக்காக உழைத்தால் எந்த உயரத்தையும் அடைய முடியும் என்பதற்கு நானே உதாரணமாகி இருக்கிறேன் என்பதை நினைத்த போது பெருமையாக இருந்தது. விழாவில் நான் பேசும்போது, 10 அமைச்சர்களையும் அவரவர்களது தாய்மொழியில் வரவேற்றேன். இது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதை உணர முடிகிறது. தாய்மொழியைக் கேட்டதும் ஒருவரது முகத்தில் ஏற்படும் பரவச உணர்வை இங்கே கண்டேன்.
தேசியத் தலைவர், மத்திய அமைச்சர்களுக்கு தமிழகத்திலிருந்து வாங்கிச் சென்ற பட்டு சால்வை, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட தாமரை மலர் கொண்ட நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தோம். ஜெ.பி.நட்டா பேசும்போது, பாராட்டு விழாவை நேர்த்தியாக நடத்தியதற்காக மகளிரணிக்கு பாராட்டு தெரிவித்தார். பெண் அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
பாஜக தேசியத் தலைவராக திரு. நிதின் கட்கரி இருந்தபோது தேசிய செய்தித் தொடர்பாளராக நிர்மலா சீதாராமன் இருந்தார். அன்று முதல் அவர் எனக்கு நண்பர். அதுபோல ஸ்மிருதி இரானி மகளிரணி தேசியத் தலைவராக இருந்தவர். அவரும் எனது நீண்ட கால நண்பர். இருவரும் 2014 முதல் மத்திய அமைச்சர்களாக மிகமிக முக்கியமான துறைகளை கவனித்தாலும் என்னை அவர்களின் உடன்பிறவா சகோதரியாக கருதி அன்பு பாராட்டி வருகிறார்கள்.
இருவரது நட்பையும், அன்பையும் நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.மத்திய அமைச்சர்கள் சார்பில் நிர்மலா சீதாராமனும், ஸ்மிருதி இரானியும் பேசினார்கள். விழாவில் நான் ஆங்கிலத்தில் பேசினாலும் இறுதியில் இந்தியில் ஒரு கவிதை வாசித்தேன். அதனைக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், “நானும் தமிழகத்திலிருந்து தான் வருகிறேன். ஆனால், வானதியைப் போல தைரியம் எனக்கில்லை. அவரைப் போல இந்தி பேச முடியவில்லை” என்று பேசினார். என்னை ஊக்கப்படுத்துவதற்காக அப்படிப் பேசினாலும் அவர் மிகச் சிறப்பாக இந்தி பேசுவார். இந்தியை புரிந்து கொள்வார். ஸ்மிருதி இரானி பேசும்போது, தேசிய மகளிரணித் தலைவராக இருந்தபோது அவருக்க கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
11 பெண்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து விடைபெற்றோம். இந்த விழா நடைபெறும் டெல்லியில் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. இந்த விழா என் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத பெருமைமிகு வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை. என்னைப் போன்ற எளிய பெண்மணிக்கு இதுபோன்ற உயரம் வேறு எந்தக் கட்சியிலும் சாத்தியமில்லை.