நடிகர் விஜய் 2012 ஆண்டு மிக விலை உயர்ந்த சுமார் 8 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும். அது போல் விஜய் இறக்குமதி செய்த காருக்கும் வரி விதிக்கப்பட்டது. இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கேட்டு விஜய் வழக்கு தொடர்ந்தார். விஜய் தொடர்ந்த இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
இதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரியாக சுமார் 60 லட்சம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது. அந்த தொகையில் 50 சதவீதத்தை செலுத்திய தனுஷ், பிறகு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் தான் ஒரு நடிகர் என ஏன் தனுஷ் குறிப்பிடவில்லை? என நீதிபதி எழுப்பினார். தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். அப்போது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்கும் மனுவை திரும்ப பெறுவதாக தனுஷ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒரு சோப்பு வாங்கும் சாமானியரும், விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியரும் கூட வரி செலுத்தி வருவதாக கூறினார். அதற்கு திங்கட் கிழமைக்குள் நுழைவு வரி பாக்கியை செலுத்த தயார் என தனுஷ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதனை மனுவாக தாக்கல் செய்ய தனுஷ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் நடிகர் தனுஷ் காருக்கான நுழைவு வரி பாக்கி குறித்து வணிக வரித்துறை தெரிவிக்க உத்தரவிட்டு, பிற்பகல் 2:15 மணிக்கு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறினார். பாலிமர் செய்திகள்