நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 29.11 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 16.62 கோடியாக இருந்த எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி 29.11 கோடியாக அதிகரித்துள்ளது. இவர்களின் விவரம் இணைப்பு-2ல் கொடுக்கப்பட்டுள்ளது.
நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இணைந்த எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு, எரிவாயு மானியம் அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 29.11 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்களில், 27.7 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தில் இணைந்துள்ளனர்.
மாநிலம் / யூனியன் பிரதேசம் வாரியாக இவர்களின் விவரம் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. எல்பிஜி மானியம், தானியங்கி முறையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதற்கு 2 முதல் 3 வேலைநாட்கள் ஆகும்.
இயற்கை எரிவாயு சேவைகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள்:
நாட்டில் இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) சேவைகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிஎன்ஜி நிலையங்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் வகுத்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்படி, ஏலம் மூலம் அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்கள், 8 முதல் 10 ஆண்டுகளில் நாடு முழுவதும், 8181 சிஎன்ஜி நிலையங்களை அமைக்கும். இதன் விலைகள் சந்தை நிலவரப்படி தீர்மானிக்கப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்க முயற்சி:
தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சுரங்க பகுதிகளில் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வாகன எரிபொருளில், இயற்கை எரிவாயுவின் பங்கு அதிகரிக்க உதவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.