திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் தெரிவித்தார்
மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு நிதியம் (FIDF) பங்களிப்பு மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் 200 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் உரையாடிய அவர்,
தமிழகத்தில் திருவொற்றியூர், தரங்கம்பாடி, நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் துறைமுகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்த மத்திய இணை அமைச்சர், துறைமுக பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார். திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள இந்த துறைமுகத்தின் மூலம் 8,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும் என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை துரிதப்படுத்தி, மீனவர்கள், மீனவ விவசாயிகளுக்கான முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் அவர். மத்சய சம்பத யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை கூடுதல் செயலர் திரு. ஜவகர், மீன்வளத்துறை இயக்குனர் திரு பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















