‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதி பெறாமல் நடத்தும் சர்ச்சுக்கு ‘சீல்’ வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக சேவகியும் தடை தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றவரும் நடிகையுமான எமி கூறியதாவது:
இலங்கையை சேர்ந்த ஷெரார்டு மனைவி ஹெலன் ஆதம்பாக்கம் கிராம சர்வே எண் 233/52 குடியிருப்புகள் உள்ள இடத்தில் அனுமதி பெறாமல் சர்ச் நடத்தி வருகின்றனர். அதில் 650 சதுர அடி ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சர்ச்சும் அதை ஒட்டி ஓட்டல் கேட்டரிங் சமையல் கூடமும் நடத்துகின்றனர். இதற்கு முறைகேடாக மின் இணைப்பு பெற்று வணிக நோக்கில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டில் ஷெரார்டு மனோகர் சர்ச்சில் இருந்த மூன்று தலித் சிறுமியர் ஒரு இஸ்லாமிய சிறுமி மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அந்த சிறுமியர் ஆலந்துார் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.முன்னதாக மூதாட்டி ஒருவர் தன் மருமகள் இரண்டு பேத்திகளை தன்னிடம் இருந்து ஷெரார்டு பிரித்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
மூதாட்டி நான் நிர்மலா இமானுவேல் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தோம். அவரின் உத்தரவின் படி பரங்கிமலை துணை கமிஷனர் விசாரித்தார்.
பின் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் மகளிர் போலீசார் விசாரித்து நவ. 6ல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஷெரார்டு மனோகர் உடந்தையாக இருந்த அவரின் மனைவி ஹெலன் கார் டிரைவர் ஜீவா ஜேக்கப் என்கிற ஜீவானந்தம் பெண் ஊழியர் விஜயலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஷெரார்டு ஹெலன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சர்ச்சுக்கு வரும் பெண்களை வைத்து மகளிர் சுய உதவி குழு பெயரில் வங்கிகளில் கடன் வாங்குவது அவர்களின் நகை பணம் பெறுவது போன்ற மோசடிகளில் மனோகர் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 22 பேர் உள்துறை செயலர் ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் ஆக்கிரமித்துள்ள சர்ச் அதை ஒட்டிய வீடு மற்றும் சமையல் கூடம் தான் குற்றம் நடந்த இடம். எனவே சர்ச்சுக்கு ‘சீல்’ வைக்குமாறு சமூக நலத்துறை வருவாய் துறை செயலர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலெக்டர் அமிர்தஜோதியை ஐந்து முறை சந்தித்தும் தென்சென்னை ஆர்.டி.ஓ. ஆலந்துார் தாசில்தாரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சீல் வைக்கக் கோரி 12 பேர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இந்த சூழலில் இரு மாதங்களுக்கு முன் தம்பதியர் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் சர்ச் உள்ள இடத்தை விற்கும் நோக்கில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் அவசர கதியில் சர்ச் கட்டடத்தில் உள்ள ஜன்னல் கதவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் அனுமதி பெறாமல் நடத்தும் ஏ.சி.ஏ. ஜீசஸ் மிராக்கஸ் மினிஸ்ட்ரீஸ் சர்ச்சுக்கு ‘சீல்’ வைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்