ஹாவேரி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, முஸ்லிம் வாலிபர் தயாரித்த ஏலக்காய் தலைப்பாகை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது.கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்குள்ள ஹாவேரியில் நேற்று முன்தினம் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பிரதமருக்கு மாலை, தலைப்பாகை அணிவித்து, கவுரவிக்கப்படுவது வழக்கமான ஒன்று.
ஆனால், ஹாவேரியில் பிரதமருக்கு அணிவிக்கப்பட்ட மாலை, தலைப்பாகை சிறப்பு வாய்ந்தது.ஹாவேரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் ஏலக்காய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்த ஏலக்காய்களை பயன்படுத்தி மாலை, தலைப்பாகை தயாரிப்பதில், இங்குள்ள படவேகரா என்ற முஸ்லிம் குடும்பம் பெயர் பெற்றது.
பிரதமர் மோடி ஹாவேரிக்கு வருகிறார் என தெரிந்ததும், அவருக்கு அணிவிக்க மாலை, தலைப்பாகை செய்து தருவதாக படவேகரா குடும்பத்தினர் கூறி இருந்தனர்.இதன்படி, அக்குடும்பத்தைச் சேர்ந்த ஹைதர் அலி, 35 என்பவர், பிரதமருக்காக சிறப்பு கவனம் செலுத்தி ஏலக்காய் மாலை மற்றும் தலைப்பாகையை வடிவமைத்து கொடுத்தார். இதை அணிந்து, பிரதமர் மோடி பிரசாரத்தில் பங்கேற்றார்.