நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகின்றது..
“தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல” என்பதை அனைவரும் அறிந்ததே. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2018 அறிக்கையின்படி, அகில இந்திய அளவில், “தமிழ்நாடு” தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன் கணக்குப்படி தமிழ்நாட்டில் 13,896 தற்கொலைகள் நடந்துள்ளதாக 2018 அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்கொலையை அம்பலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும், ஒரு தற்கொலை மற்றொரு தற்கொலைக்கு காரணமாக அமைந்து விடும் என்றும் கூறி இருக்கின்றது. மாணவர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு, தங்களுடைய ஊக்கத்தை இழந்து விடுகிறார்கள் எனில், அதற்குக் காரணம் சூழலே. “தன்னால் முடியும்” என்று முயற்சித்து, வெற்றி பெற ஊக்கம் அளிக்க வேண்டியது சுற்றியுள்ள சமூகம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் போன்ற எண்ணற்ற விஞ்ஞானிகள் தங்களின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. பல முயற்சிகளுக்குப் பின்னர் தான், தங்களுடைய சுய உழைப்பினால், ஊக்கத்தினால் தான் வெற்றி பெற்றார்கள். மாணவர்களை அரசியல் கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன. “நாங்கள் வெற்றி பெற்றால், நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம்” என்று கூறி வாக்கு கேட்டனர். அதனையும் நம்பி வாக்களித்தவர்கள், “நீட் தேர்வு ரத்து” போன்ற ஏதும் நடக்கவில்லை என்பதால் கூட தற்கொலை செய்து கொண்டு இருக்கலாமே..!!
“நீட் தேர்வு காரணமாக, தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும்” என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
– கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட மாணவர்கள் தேர்வு எழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்ணயிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது..
கொரோனாத் தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த காலத்தில் கூட, தங்களுடைய படத்தை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்ற எண்ணத்தில், தியேட்டர் அதிபர்களின் அறைக்கூவலையும் மீறி, சுயலாபத்திற்காக OTTயில், நடிகர் சூர்யா வெளியிடுவது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., (JEE) எனப்படும் இணை நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். திருப்பூர், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த சவுந்தர்யா என்ற மாணவி, ஜே.இ.இ., (JEE) மெயின் தேர்வில், 77.9 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழக மாணவர்கள், எந்த நேரத்திலும், தங்கள் தகுதியை நிரூபிக்க தயாராக உள்ளனர். அவர்களை ஊக்குவித்து முன்னேறச் செய்தால் நிறைய சாதிக்கும் திறமை கொண்டவர்கள் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சான்று.
– கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சம் இல்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகின்றது..
நெருக்கடியான காலக்கட்டத்தில், வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் தங்களுடைய கடமையில் இருந்து, தவறாமல் நீதி வழங்க வேண்டி, மாற்று வழியான “வீடியோ கான்பரன்சிங்” வழியை பின்பற்றுகின்றனர். இதனை பாராட்ட மனம் இல்லாது, விமர்சிப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் தானே.?
– “தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை” என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது..
உங்கள் படம் வெளி வருவதற்கு முன்னர், அந்த படத்தின் விளம்பரத்திற்காக, ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை கூறுவது போல, பேட்டி கொடுப்பது உங்களுக்கு பழக்கம் தானே?
உங்களது முந்தைய படத் தயாரிப்பான “பொன்மகள் வந்தாள்” படம் வெளிவர இருக்கும் போது, “தஞ்சாவூர் பெருவுடையார் கோவில்” பற்றி தங்களின் மனைவி ஜோதிகா பேசியதும், தற்போது, உங்கள் அடுத்த படமான “சூரரைப் போற்று” வெளிவர இருக்கும் வேளையில், நீட்டை எதிர்ப்பது போன்று, அறிக்கை வெளியிட்டு, அதன் மூலம் அடுத்த படத்திற்கான வருவாயை கூட்ட நினைப்பது, போன்ற செயல்கள், ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தானே..?!
– நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது..
நீட்டை ஆதரித்து, 2017ல் “நீட் புத்தகம்” வெளியிடும் போது, நன்றாக இருந்ததா?
2019ம் ஆண்டு, 188 இடங்களில், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அதில், 59 ஆயிரத்து 785 மாணவர்கள் தேர்வு பெற்றனர். 2018 ஆண்டு 39.56 சதவீதமாக இருந்த நீட் தேர்ச்சி விகிதம், 2019ம் ஆண்டு 48.57 சதவீதம் ஆக மாறியது.
2020ம் ஆண்டு, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள், 238 இடங்களில் தேர்வு எழுதினர்.
மனுநீதிச் சோழன், பசுவிற்காக தன்னுடைய மகனை தேறிலிட்டு கொன்றார். அனைவருக்கும் சமமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான், மனுநீதிச் சோழன் அவ்வாறு செய்தார். தன் மகன் என்றும் பாராமல் தேறிலிட்டு கொன்றார்.
அது போல், ஏழை – பணக்காரன் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தி, அதன் மூலம், மருத்துவ இடம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பணத்தால் அல்ல, நல்ல மதிப்பெண்ணால், மனுநீதி சோழன் போன்று நீட் தேர்வு, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குகின்றது.
– மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்..
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், NEET தேர்வு நடத்தப்படும் என்று, 2010 ஆம் ஆண்டு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி இந்திய மருத்துவக் கழகம் (MCI), மத்திய அரசின் முன் அனுமதியோடு மேலும் ஒரு அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த அறிவிப்பு NEET தேர்வு விதிமுறைகள் பற்றியது.
NEET தேர்வில் தகுதி பெற, எந்தெந்த பாடங்களில் குறைந்தபட்சம், எவ்வளவு மதிப்பெண்களைப் பெற வேண்டும், எந்தெந்த சமூகப் பிரிவு மாணவர்கள்,
எவ்வளவு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற வரையறைகளும், NEET தேர்வை CBSC நடத்தும் என்ற விவரமும் அந்த அரசிதழ் அறிவிப்பில்
இடம் பெற்று இருந்தன.
மாணவர் நலனில், அக்கறைக் கொண்டு, இவ்வாறு வெளியிட்ட, காங்கிரஸ் கட்சியயையோ, அதன் கூட்டணி கட்சியான திமுகவையோ விமர்சிக்காமல், தற்போது ஆளும் கட்சியான, மத்திய பாஜக ஆட்சியை விமர்சிப்பது ஏன்?
ஒருவேளை, அப்போது நீட்டை ஆதரித்து, புத்தகம் வெளியிடும் வேலையில் இருந்தீர்களா?, நடிகர் திரு சூர்யா அவர்களே.!
– நமது பிள்ளைகளின் தகுதியையும் திறமையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது..
நமது பிள்ளைகளை, மற்றவர்களோடு போட்டி போடும் வகையில், தயார் படுத்தாமல், அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு, செயல்படுவது ஏன்?
நமது பிள்ளைகள், தங்களின் தகுதியையும், திறமையையும் வளர்த்துக் கொண்டு, எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற வைக்கும் எண்ணம் இல்லாமல் இருப்பது ஏன்?
– சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற “நீட் தேர்வுக்கு” எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்…
2017 ஆம் ஆண்டு, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரான திரு ஜே.பி.நட்டா அவர்கள், தமிழக அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்காக, உள் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்ற சிறப்பு சலுகையை வழங்கினார். நமது பிள்ளைகளின் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்காக சிறப்பு சலுகை தந்தது, தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும், அன்றைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஜே.பி.நட்டா அவர்கள். இந்த நல்ல செயலை, பாராட்ட மனம் இல்லாமல் இருப்பது ஏன்?
மாநிலங்கள் வாரியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற சராசரி மதிப்பெண்கள்:
சண்டீகர் – 244.24 %
ஹரியானா – 234.44%
டில்லி – 230.04%
ராஜஸ்தான் – 229.18%
ஆந்திரப்பிரதேசம் – 220.49%
தமிழ்நாடு – 144.55%
மாநிலங்கள் வாரியாக நீட் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்:
மாநிலங்கள் | 2019 | 2018 |
தில்லி | 74.92 | 73.73 |
ஹரியாணா | 73.41 | 72.59 |
சண்டீகர் | 73.24 | 71.81 |
ஆந்திரப் பிரதேசம் | 70.72 | 72.55 |
ராஜஸ்தான் | 69.66 | 74.30 |
தமிழ்நாடு | 48.57 | 39.56 |
– நவீன கால துரோணர்கள் முன் எச்சரிக்கையுடன் ஆறாம் வகுப்பு குழந்தைகூட தேர்வு எழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்..
தங்களின் அகரம் பவுண்டேஷன் மூலமாக, ஒரு மாணவன் உதவித்தொகை பெற நான்கு கட்டத் தேர்வை நடத்துகின்றீர்கள். முதலில் மனுவை வாங்குவது, பின்னர் அவர்களோடு நேர்முகத்தேர்வு, அதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்று ஆய்வு, அதன்பிறகு, அவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து அவர்களுக்கு உதவி செய்வது என, உதவித் தொகையை, உடனே நேரடியாக வழங்காமல், நான்கு கட்டத் தேர்வை வைப்பது ஏன்..?
இது எந்த வகையில் நியாயம், பதில் அளிப்பீர்களா, நடிகர் திரு சூர்யா அவர்களே..?
– ஒரே நாளில் “நீட் தேர்வு” 3 மாணவர்களை கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும் நடந்தது. இனி நாளையும் நடக்கும்..
2018ல் 11ஆம் வகுப்பு மற்றும் 2019ல் 12ஆம் வகுப்புக்கான தமிழக பாடத்திட்டத்தை மாநில அரசு மாற்றி இருந்தது. அதையடுத்து, இரு தினங்களுக்கு முன் நடந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 174 கேள்விகள் (97%) தமிழக பாடநூல் திட்ட புத்தகங்களில் உள்ளவை.
மாணவர்களுக்கு தைரியமூட்டி, நன்றாக படித்தால், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்ற தைரியத்தை ஊட்டி.. இப்போது தோல்வியுற்றாலும், அடுத்து வரவிருக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக முடியும் என்ற கனவை விதைக்காமல் இருந்தது யார்?
நீட் தேர்வு.. நேற்றும், இன்றும், நாளையும் நடக்கும் என்று அறிந்தும், மாணவர்களை தற்கொலை செய்ய தூண்டியது யார்? என்ற கேள்விக்கு பதில் யார் அளிப்பார்கள்.?
– அப்பாவி மாணவர்கள் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது..
தமிழகத்தில் 3 ஆயிரத்து 600 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 1950 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன. இதனுடன், மேலும் 1600 இடங்கள் மத்திய அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், மருத்துவக் கல்லூரியில், 7 ஆயிரத்து 150 இடங்கள், தமிழகத்தில் உள்ளன.
தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் 24 உள்ளது. அதில் நிறைய கல்லூரிகள், திமுக தலைவர்களது சார்ந்தவை. அதில் அப்பாவி மாணவர்களுக்கு, எத்தனை இடங்கள், இலவசமாக அளித்து இருக்கின்றார்கள்?, அமைதியாக வேடிக்கை பார்க்காமல், திமுக தலைவர்களிடம் பேசி, அப்பாவி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தர முன் வருவீர்களா? அதைப்பற்றி கேட்க தைரியம் உள்ளதா.? நடிகர் சூர்யா அவர்களே…
– வேதனையுடன்…
நீட் தேர்வுக்காக வாதாடி, போராடி வெற்றி பெற்று வழக்காடிய காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரின் மனைவியைப் பற்றி, கருத்து தெரிவித்து உள்ளீர்களா? உங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும், களத்தில் இறங்கி இருக்கின்றது. திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. மேலும், திமுக அனுதாபி மதிமாறன் அவர்களோ, தேர்தல் சமயத்தில், குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார். இதன் மூலம், தங்களுடைய அறிக்கை, நீங்களாக தயாரித்தது அல்ல, மற்றவர்களால் தயாரிக்கப்பட்டது என்பது தெளிவாக புரிகின்றது.
தங்களின் முதல் படத்தில், சரியாக நடனமாட தெரியவில்லை என ஒரு ரசிகர் கேலி செய்ததை பலமுறை சுட்டிக்காட்டி, பல பேட்டிகளில் கூறி இருக்கின்றீர்கள். அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, நன்றாக நடிக்கவும், நடனத்தைக் கற்று, அடுத்தடுத்த படங்களில், முன்னேற்றம் செய்தேன் என கூறி இருக்கும், நீங்கள் பல தோல்விப் படங்களைகொடுத்தாலும், மீண்டும் வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும், உங்களைப் பார்த்து தமிழக மாணவர்கள் நிச்சயமாக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியை கண்டு துவளாமல் வெற்றி நமதே என்ற எண்ணத்துடன் மாணவர்கள் செயல்பட, உங்களது நிறைய தோல்வி படங்கள், நிச்சயமாக மாணவர்களுக்கு ஓரு முன் உதாரணமே..!!