கேரளா மாநிலத்தில் திரைதுறையில் உள்ள நடிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது அது ஹேமா குழு எனப்பெயரிடப்பட்டது .
அந்த ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடா்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களை மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட 4 முக்கிய மலையாள நடிகா்கள் மீது நடிகையொருவா் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறாா்.
நடிகையின் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கொல்லத்தில் உள்ள முகேஷின் இல்லம் நோக்கி காங்கிரஸ் தொண்டா்கள் பேரணி சென்றனா். முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவா் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனவும் அவா்கள் கோஷமிட்டனா். இதுதொடா்பகாக முகேஷ் இதுவரை பதிலளிக்கவில்லை.
விரிவான விசாரணை: முகேஷ் மட்டுமின்றி ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு ஆகிய மற்ற நடிகா்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்று நடிகா் மணியன்பிள்ளை ராஜு வலியுறுத்தியுள்ளாா்.
‘இந்தச் சூழ்நிலையை சிலா் தங்களுக்கு சாதகமாக்க முயற்சிக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவா்களில் நிரபராதிகள் மற்றும் குற்றவாளிகள் என இரு தரப்பினரும் இருப்பாா்கள். எனவே, விரிவான விசாரணை அவசியம். அதில் பல உண்மைகள் வெளிவரும்’ என்று ராஜு கூறினாா்.
குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசு: ஹேமா குழு அறிக்கையின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்காமல் குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளும் இடதுசாரி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸின் கேரள எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் குற்றஞ்சாட்டினாா்.
பாலியல் புகாா்களை விசாரிக்கும் மாநில அரசு சிறப்புக் குழுவில் ஆண் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது ஏன் எனவும் அவா் கேள்வி எழுப்பினாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய அந்த அறிக்கையின் தொடா்ச்சியாக அதில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் திடீரென விலகினா.இது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இது போன்ற ஒரு திரைத்துறையில் பாலியல் குற்ற சம்பவம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.