மும்பை-ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைவது குறித்து, நடிகை நக்மா யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை நக்மா, 47, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். சினிமாவில் மார்க்கெட் இழந்த பின், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்., வேட்பாளராக களம் இறங்கி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து, அகில இந்திய காங்., மகளிர் அணி பொதுச் செயலராக 2015ல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வரும் 10ம் தேதி நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், தான் போட்டியிட காங்., தலைமை வாய்ப்பு வழங்கும் என நக்மா நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், வேட்பாளர் பட்டியலில் நக்மா பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து, கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். கட்சிக்காக உழைக்கும் தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர நக்மா தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















