ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களுக்கு பா.ஜ., மற்றும் பா.ம.க ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது !
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி., இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24ம் தேதி துவங்குகிறது. சட்டசபையில் கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் பலத்தின் அடிப்படையில் ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, திமுக.,வுக்கு 4 எம்,பி.,க்களும், அதிமுக.,வுக்கு 2 ராஜ்யசபா எம்.பி.,க்களும் கிடைக்கும். இதில் திமுக சார்பில் 3 வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்தது. ஒரு எம்.பி.,க்கான இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தது திமுக.
அதிமுக தரப்பில் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில், தங்களுக்கான 2 எம்.பி., இடங்களுக்கு அதிமுக எம்எல்ஏ.,க்கள் வேலுமணி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பா.ஜ.,வின் ஆதரவையும் பெறுவதற்கு கமலாலயம் சென்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கம், அதிமுக வேட்பாளருக்கு பா.ஜ., ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளதாக கூறினார்.
அதன்பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து அதிமுக மூத்த தலைவர்கள் ஆதரவு கோரினர். இதனையடுத்து, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக பாமக.,வும் தெரிவித்துள்ளது