உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது..
மேலும் காசி விஸ்வநாதர் அறக்கட்டளை மூலமாக பூசாரி நியமிக்க வேண்டும். மேலும் பூஜைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் எனவும் உத்தரவு அளித்துள்ளது..ஞானவாபியில் ஹிந்துக்கள் வழிபட, 31 ஆண்டுகளுக்கு தடைகளுக்குப் பிறகு தற்போது தடையை விலக்கி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்துக்களின் புனிதத் தலமான வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி, புனிதமான கோயிலை இடித்து கட்டப்பட்டதாகவும், அதில் இந்துக் கடவுளரின் சிலை இருப்பதாகவும், அதனால் தங்களை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இந்து மதத்தைச் சேர்ந்த சில பெண்கள் நீதிமன்றத்தை நாடினர்.
இதை அடுத்து, நீதிமன்றம் இது தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இறுதியாக ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புகளுடன் மசூதியில் தொல்லியல்துறை அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொண்டது. அதன் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் மசூதிக்குள் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதை சுட்டிக் காட்டியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பான வழக்கு இன்று வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் “ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டது.
இதை அடுத்து, அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என இந்துக்கள் தெரிவித்தனர். இந்து தரப்பு வழக்கறிஞர் சுதிர் திரிபாதி இதுகுறித்துக் கூறுகையில் “வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 7 நாட்களில் எந்த நாட்களிலும் வழிபாடு தொடங்கப்படலாம்” என்றார்.
இந்து தரப்பினர் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் “நாங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வோம்” என்றார். மற்றொரு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி “இன்று பூஜை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் தீர்ப்பை ஒருவாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது” என்றார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஹிந்துப் பெண்கள் சிலர், ஞானவாபி மசூதி தெற்குச் சுவரை ஒட்டி உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாராணசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் விசுவரூபமெடுத்தது.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கே சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். ஆனால் மசூதி நிர்வாகம், அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி என்றும், மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
ஆனால், சிவலிங்கத்தை நீருக்குள் அழுத்தி, அதில் முஸ்லிம்கள் கால் கழுவி வருவதாக இந்துக்கள் தரப்பு தெரிவித்ததை அடுத்து இந்தப் பிரச்னையின் அடி ஆழத்தை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















