டில்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, விமானத்தில் இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத், சிகிச்சை அளித்து உதவினார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருப்பவர் டாக்டர் பகவத் காரத். டாக்டரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்பதற்கு முன்னர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மேயராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று(நவ.,16) தலைநகர் டில்லியில் இருந்து தனியார் விமானத்தில் மும்பைக்கு சென்றார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, 45 வயதான பயணி ஒருவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அது குறித்து தகவல் அறிந்த விமான பணிப்பெண்கள், சக பயணிகளின் உதவியை நாடினர்.
விமானத்தில் யாரேனும் டாக்டர்கள் உள்ளார்களா என்று விமான ஊழியர்கள் கேட்டபோது ஒரு பயணி முன்வந்தார். அவர்தான் டாக்டர் காரத். மத்திய இணை அமைச்சரான காரத்தும் அதே விமானத்தில் பயணித்தார்.
இதனையடுத்து, பகவத் காரத் உடனடியாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்தார். அந்த பயணிக்கு குளுக்கோஸ் அளித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மும்பை சென்றடைந்ததும், அந்த பயணிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.இது தொடர்பாக பகவத் காரத் கூறுகையில், அந்த பயணிக்கு தொடர் வியர்வை ஏற்பட்டதுடன், ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக குளுக்கோஸ் செலுத்தப்பட்டதும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் காரத்தின் உடனடி செயல்பாடுகளால் அந்த பயணி பெரும் ஆபத்திலிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. காரத்தின் இந்த அணுகுமுறைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி போட்டுள்ள டிவீட்டில், ஒரு நல்ல டாக்டராக எனது சக அமைச்சர் காரத்தின் செயல்பாட்டை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.இந்த செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















