இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கர், 1920-21-ல் லண்டனில் உயர்கல்வி பயின்றார். அப்போது, வடமேற்கு லண்டனின் காம்டென் நகரில் கிங் ஹென்றி சாலையில் உள்ள 10-ம் எண் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த வீட்டை அதன் உரிமையாளர் கடந்த 2015-ம் ஆண்டு விற்க முடிவு செய்தார். இதை அறிந்த மகாராஷ்டிர அரசு அந்த வீட்டை சுமார் ரூ.30 கோடிக்கு வாங்கியது.
பின்னர் அந்த வீடு அம்பேத்கரின் நினைவகம் மற்றும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதில் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் திட்ட அனுமதி பெறவில்லை எனக் கூறி, நினைவகத்தை மூட காம்டென் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அந்த நினைவகத்துக்கு முறைப்படி திட்ட அனுமதி கோரி காம்டென் நகராட்சியிடம் விண்ணப்பித்தது. ஆனால் அது கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
இதை எதித்து இந்திய தூதரகம் சார்பில் திட்டமிடல் இயக்குநரகத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுபற்றி விசாரிக்க தனி ஆய்வாளர் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையின்போது, “லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் அம்பேத்கர் படிக்கும்போது இந்த வீட்டில் வசித்து வந்தார். இதனால் இங்கு வசிக்கும் இந்தியர்கள் இந்த வீட்டை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
மேலும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நிலையில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் இந்த நினைவகம் முக்கியப் பங்கு வகிக்கும்” என இந்தியா தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதற்கு உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வேறு இடத்துக்கு இதை மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆய்வாளர் தனது பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், அம்பேத்கர் நினைவகம் அதே இடத்தில் செயல்பட பிரிட்டன் அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வீட்டுவசதித் துறை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறும்போது, “நவீன இந்தியாவின் நிறுவனர்களில் ஒருவரும் மிக முக்கிய பிரிட்டன் இந்தியர்களில் ஒருவருமான அம்பேத்கரின் நினைவகம் லண்டனில் செயல்பட திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.