நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது
.2021 ஜனவரி 23-இல் இருந்து ஒரு வருடத்திற்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து இந்த குழு முடிவு செய்யும். சுதந்திர போராட்டத்திற்கு நேதாஜி அளித்த மாபெரும் பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை குறித்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ”காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரமிக்க மற்றும் வரலாற்றில் அழிக்க முடியாத பங்களிப்புக்காக, இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடையதாக இருக்கும். சக இந்தியர்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பாடுபட்டவர் அவர்,” என்று கூறியுள்ளார்.
நிபுணர்கள், வரலாற்றுவியலாளர்கள், எழுத்தாளர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள், இந்திய தேசிய ராணுவத்துடன் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் அரசு அமைக்கவுள்ள உயர்மட்ட குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்.