சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று துவக்கி வைத்தார்.
மேலும், புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் தொடர்பான மொபைல்போன் செயலிகளையும் அவர் அறிமுகம் செய்தார்.இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரிட்டிஷ் காலத்தில் இருந்த மூன்று கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக, புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இது, 21ம் நுாற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக இருக்கும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, இந்த சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.
கடந்த, 2014 முதல் 2024 வரையிலான, 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட சீர்திருத்த, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள், நடவடிக்கைகள், நம் நாட்டின் வளர்ச்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
இதை அங்கீகரிக்கும் வகையிலேயே, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க மக்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியை தேர்வு செய்துள்ளனர்.இது கூட்டணி அரசு, அதனால் நீண்ட காலம் இருக்காது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்த கூட்டணி அரசு, தன் முழு பதவிக் காலத்தை நிறைவு செய்யும். மேலும், 2029ல் நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும், மோடி தான் பிரதமராக வருவார்.கடந்த தேர்தல்களைவிட சற்று அதிகமான இடங்களில் வென்றுள்ளதால், ஏதோ பெரிய வெற்றி பெற்றதாக காங்கிரஸ் நினைக்கிறது.
அடுத்த தேர்தலிலும், எதிர்க்கட்சி வரிசை தான், காங்கிரசுக்கு கிடைக்கும்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















