ஏப்ரல் 25-ஆம் தேதியன்று, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த, திருவண்ணாமலை இராணுவ ஆள்சேர்ப்பு பேரணியில் வெற்றி பெற்றவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு, கொவிட் பரவலால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘இந்திய ராணுவத்தில் சேருங்கள்’ (http://www.joinindianarmy.nic.in) என்ற இணையதளத்தில் புதிய தேதி பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். தேதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் சென்னையிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புதிய அனுமதி அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டம் ஆகிய சென்னை (தலைமையகம்) ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் உள்ள தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ராணுவ வீரர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் உதவி செவிலியர், ராணுவ வீரர் உதவி செவிலியர் கால்நடை, ராணுவ வீரர் எழுத்தர், பண்டகக் காப்பாளர் தொழில்நுட்பம், ராணுவ வீரர் பொதுப்பணி, ராணுவ வீரர் வர்த்தகர் உள்ளட்ட பணிகளில் சேர்வதற்கான இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி 2021 பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 26 வரை திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது கொவிட் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ராணுவப் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.