2025 ஆம் ஆண்டுக்குள் ஏதேனும் ஒரு ஆண்டு காலத்தில் உலகின் வெப்ப நிலை, தொழிற்சாலைகளுக்கு முந்தைய காலகட்டத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்க 40 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக ஒரு பெரிய ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. இதன் காரணமாக பருவ நிலை மாற்றங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு நாடுகளில் இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
பருவநிலை நடவடிக்கைகள் தொடர்பாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய சர்வதேச மன்றம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டு பருவ நிலை மாற்றங்கள் குறித்து அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது :பருவநிலை நடவடிக்கைகளில் இந்தியாவின் செயல்பாடுகள் மிக சிறப்பாக அமைந்துள்ளது.
இந்தியாவின் உலகளாவிய அணுகுமுறை, மற்றும் வலுவான தனியார் துறைகளுடன் எங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும் மேலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் சில முக்கிய வழிகள் உள்ளன என நம்புகிறேன்.
அதில் முதலாவதாக மாற்றத்தை ஆதரிக்க தனியார் மூலதனத்தின் பங்கை அதிகரிக்க நாம் கவனம் செலுத்த வேண்டும்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் குறிப்பாக சூரிய சக்தி துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதில் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் உலகுக்கே உதாரணமாக விளங்குகிறது.இவ்வாறு பேசினார்.