தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 1235 மருந்தாளுநர்கள் (Pharmacist) உள்ளிட்ட 4624 துணை மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, அடுத்த சில நாட்களில் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவுள்ளது. இம்முறையாவது பி.பார்ம் (B Pharm) பட்டதாரிகளுக்கு மருந்தாளுநர் பணி அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் எழுந்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் சுமார் 5000 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மருந்தியலில் பட்டப்படிப்பு (பி.பார்ம்), பட்டயப்படிப்பு (டி.பார்ம்) படித்தவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவர். டி.பார்ம் படித்தவர்களுடன் ஒப்பிடும் போது பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்துகள் குறித்த கூடுதல் புலமை இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ நிறுவனங்களில் மருந்தாளுநர் பணி மறுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கூடுதலான வேலைவாய்ப்புகள் இருப்பதால் அவர்களுக்கு மருந்தாளுநர் பணி வழங்கத் தேவையில்லை; டி.பார்ம் படித்தவர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் இல்லை என்பதால் அவர்களுக்கு மட்டுமே இப்பணி வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் வாதமாகும். இந்த வாதம் அடிப்படையும், அறமும் அற்றது.
மருந்தாளுநர் பணிக்கு அடிப்படைத் தகுதி டி.பார்ம் என்றால், டி.பார்ம் மற்றும் அதை விட கூடுதலாக படித்த அனைவருக்கும் மருந்தாளுநர் பணி வழங்கப்பட வேண்டும். அது தான் இயற்கை நீதி ஆகும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சில பொறியியல் பணிகளுக்கு பட்டயப்படிப்பு தான் அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பொறியியல் பட்டதாரிகளும் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பத்தாம் வகுப்பை தகுதியாக கொண்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களும், பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்ட பணிகளுக்கு அதைவிட கூடுதலான கல்வித் தகுதி கொண்டவர்களும் போட்டியிடுகின்றனர். அந்த அடிப்படையில் பார்த்தால் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் கல்வி வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், வேலைவாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. அதிலும் அரசு வேலைவாய்ப்புகள் அரிதிலும் அரிதாகி விட்டன.
அதனால் தான் அலுவலக உதவியாளர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றவர்களும், எம்.பி.ஏ பட்டதாரிகளும் போட்டியிடுகின்றனர். இத்தகைய சூழலில் தேவையான தகுதியை விட கூடுதல் தகுதி உள்ளது என்பதற்காக ஒரு பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமாகாது. அது உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்காது. இன்னொரு பக்கம், பி.பார்ம் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதே தவறாகும். தமிழ்நாடு அரசுத்துறைகளில் பி.பார்ம் படித்தவர்கள் மருந்து ஆய்வாளர் (Drug Inspector) பணிக்கு மட்டுமே செல்ல முடியும். தமிழக அரசில் இந்தப் பணிகள் மொத்தமே 140 தான் உள்ளன. இவ்வளவு குறைந்த வேலைவாய்ப்பு கொண்ட பி.பார்ம் பட்டதாரிகள் மருந்தாளுநர் பணிக்கு செல்லக்கூடாது என்பது பெரும் சமூக அநீதியாகும்.
மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டதன் நோக்கம் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கக்கூடாது என்பது அல்ல. மாறாக, 1963-65 காலத்தில் டி.பார்ம் படிப்பு மட்டுமே இருந்ததால், மருந்தாளுநர் பணிக்கு அதுவே அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பி.பார்ம் படிப்பு 1975&ஆம் ஆண்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பி.பார்ம் படித்தவர்களும் மருந்தாளுநர் ஆகலாம் என்று விதிகள் மாற்றப்படாதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகும்.
மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு சாதகமாக இடைக்காலத் தீர்ப்பை 2019&ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன்படி அந்த ஆண்டில் நடைபெறவிருந்த மருந்தாளுநர் பணிக்கான போட்டித்தேர்வுக்கு பி.பார்ம் படித்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
ஆனாலும், 2019&ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய மருந்தாளுநர் பணிக்கான தேர்வுகள் பல்வேறு காரணங்களால் இப்போது வரை நடத்தப்படவில்லை. இப்போதும் நிலுவையில் உள்ள அந்த வழக்கில், மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் பட்டயதாரிகளை மட்டும் அனுமதிப்பதா? பி.பார்ம் பட்டதாரிகளை மட்டும் அனுமதிப்பதா? அல்லது இரு தரப்பையும் அனுமதிப்பதா? என்பது பற்றி முடிவெடுத்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மருந்தாளுநர் பணி நியமனத்தில் டி.பார்ம் பட்டயதாரிகள், பி.பார்ம் பட்டதாரிகள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு மருந்தாளுநர் பணிக்கு இரு தரப்பினரும் விண்ணப்பித்து, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் வகையில் புதிய திட்டத்தை தயாரித்து அரசு செயல்படுத்த வேண்டும்; இரு தரப்பினரின் நலன்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்துகி