இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அங்குள்ள சீதை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான்கு நாள் பயணமாக இலங்கைக்கு சென்றடைந்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை பணியாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள மே தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின்போது, இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் மற்றும் அரசுசாரா அமைப்பினரை சந்தித்துப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, தனது பயணம் குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா-விடம் அண்ணாமலை அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,
இதனிடையே, நுவேரா எலியா மாவட்டத்தில் உள்ள சீதை அம்மன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா மற்றும் இலங்கையின் வரலாறு மற்றும் நாகரீகம் ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ளது. கொழும்பிலிருந்து 182 கிமீ தொலைவில் உள்ள நுவேரா எலியா மாவட்டத்தில் உள்ள சீதா எலியாவில் உள்ள சீதை அம்மன் கோவில் இதை உறுதிப்படுத்தியது. இங்கு தான் சீதா மாதாவை ராவணன் சிறைபிடித்து அடைத்தார்.
பின்னர் இவ்விடத்திலிருந்து பகவான் அனுமன் சீதையைக் காப்பாற்றினார். ராமர், சீதை, லக்ஷ்மன் மற்றும் அனுமனின் சிலைகள் கொண்ட இந்த அழகிய கோயில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவளி தமிழர்களால் இந்த கோவில் நிர்வகிக்கப்படுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.