கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் கிட்டத்தட்ட 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான சர்வே பணிகளை முடித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நிலம் கையகப்படுத்தப்படவிருக்கும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், “3,800 ஏக்கருக்கு தொழிற்பேட்டை அமைக்கிறோம் என்று கிளம்பி வந்திருக்கின்றனர். விவசாயிகளுக்காக இங்கு வந்திருப்பதால், அரசியல் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்.
விவசாயிகள் மூலமாக நமக்கு உணவு வந்து கொண்டிருக்கிறது. மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த சமுதாயம் விவசாயத்தை நாடி வரவேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை தலையில் விழுந்த இடியாகத்தான் பார்க்கிறோம்.தண்ணீர் இல்லாத வறட்சியான பகுதிக்குதான் தொழிற்பேட்டை வேண்டும். இந்தப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு செங்கலை வைக்கக் கூட நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. எந்தப் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம். கோட்டையை நோக்கி பேரணியும் செல்லவிருக்கிறோம்.
இதன்பிறகும் காது கொடுத்து கேட்கவில்லை என்றால், மத்திய அரசின் பவரை முழுமையாக பயன்படுத்த தயாராக இருக்கிறோம்” என்றார். அந்தப் பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் இருந்ததால், சில இடங்களில் அண்ணாமலை கன்னடத்தில் பேசினார்.ஆரம்பத்திலேயே இடைத்தரகர்கள் விவசாய நிலத்தை வாங்க தொடங்கிவிட்டனர். இங்கு தொழிற்பேட்டை கொண்டு வரவேண்டாம். விவசாயிகளை விவசாயம் செய்ய விடுங்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற விளை நிலம் கிடைக்காது. இவை அனைத்தும் தங்கம்.
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க சகோதரர்களை குறிவைத்து வழக்கு போட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயம். அரசியல் நாடகம் செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தி.மு.க-வினர் நினைக்கின்றனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்கிறோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வாக்குறுதி கொடுக்கவில்லை.ஆனால், மத்திய அரசு விலையை குறைத்தவுடன் தற்போது அவர்களும் விலையை குறைத்து விட்டனர்.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் விலையை குறைக்கிறோம் என்று சொல்லிவிட்டு, குறைக்கவில்லை என்றால், இது கார்ப்பரேட்களுக்காக இயங்குகிற அரசு என்றுதான் அர்த்தம்.டெண்டர் விடுவதென்றால் உடனடியாக கிளம்பிவிடுவார்கள். அதில்தான் 20 சதவிகிதம் கமிஷன் கிடைக்கும். எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. கப்பல் நடுக்கடலில் போய் கொண்டிருக்கிறது. கேப்டன் இருக்கிறார். மாலுமி இருக்கிறார்.
என தமிழக பாஜக மாநில அண்ணாமலை தெரிவித்துள்ளார்.