கரூர் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: திமுக.,வினர் சுயலாபத்திற்காக மின்கட்டண உயர்வினை ஏற்றியுள்ளனர். கரூரை சார்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின்கட்டண உயர்வினை ஏற்படுத்தியுள்ளார். ஏன் மின் கட்டணம் உயர்வினை உயர்த்தினீர்கள் என்று கேட்டால், மோடி சொன்னாரு நாங்கள் செஞ்சோம் என கூறுகிறார். அதிகமாக பொய் சொல்லும் அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும். தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், செந்தில்பாலாஜியை போல யாரும் இல்லை என்று புகழ்ந்துள்ளார். காரணம் கோபாலபுரத்திற்கு வரும் டாஸ்மாக் வருமானம், மின் துறை மூலம் தனியார் நிறுவனம் மூலம் வரும் கோடிக்கணக்கான வருமானம், டாஸ்மாக் மூலம் ஆண்டு வருமானம் பல கோடிகள் வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். செந்தில்பாலாஜி இப்போதே சிறை செல்ல தயாராகி கொள்ள வேண்டும். செந்தில்பாலாஜிக்கு சிறை உறுதி. அப்போது எந்த முதல்வர் வந்து காப்பாற்றுவார் என்று பார்க்கலாம். ஏற்கனவே 5 கட்சிகளுக்கு சென்ற செந்தில்பாலாஜி, சிறைக்கு சென்ற பின்னர் 6வது கட்சிக்கு மாறுவார்.
கரூர் மாவட்ட மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜியின் எண்ணம். அப்போதுதான் தேர்தலுக்கு தேர்தல் அவர்களுக்கு 1000, 2000 ரூபாய் பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க முடியும். அதன் பிறகு மீண்டும் அவர்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். டாஸ்மாக் கடை வைத்து தமிழக பெண்களின் தாலி அறுத்து வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவதே இலக்கு. ஏழை மக்களுக்காக பா.ஜ., எப்போதும் உடன் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















