சீனாவின் ஊகான் நகரத்திலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகை ஆட்டி படைத்தது வருகிறது. இந்த வைரஸ் குறித்து சீனா வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டது. மேலும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என சீனா மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளை சின்னாபின்னமாக்கியது இந்த கொரோனா வைரஸ். இதன் காரணமாக சீனாவில் முதலீடு செய்திருந்த நாடுகள் தங்களின் முதலீடுகளை திரும்ப பெற்று வருகிறது.கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, சீனாவிலிருந்து வெளியேற வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.இதனை தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும் சீனாவிலிருந்து இந்தியா வர உள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவன அதிகாரிகளுக்கும், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த பேச்சின் விளைவாக, ஆப்பிள் நிறுவனம், சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் உற்பத்தித் திறனில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை, சீனாவிலிருந்து, இந்தியாவுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இது நடந்தால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளாராக ஆகிவிடும்.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. இச்சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. ஆப்பிளின் ஒப்பந்த நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் தான், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களையும், பிற பொருட்களையும் தயாரித்து வருகின்றன. இந்நிறுவனங்களை பயன்படுத்தி, இந்தியாவில் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய, ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உற்பத்தி மட்டுமல்லாமல் இந்தியாவில் விற்பனை நிலையங்களையும் திறக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதுவரை ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான ஷோரூம்கள், இந்தியாவில் இல்லை. 2021ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆப்பிளின் முதல் ஷோரூம் திறக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.