தமிழகத்தில் அரிவாள் வெட்டு என்பது சகஜமாகி வருகிறது. கடந்த இரு நாட்களில் பரமத்திவேலூரில்
எண்ணெய் ஆலை மேலாளருக்கு அரிவாள் வெட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் அரிவாள் வெட்டு சம்பவம் நடந்தேறியுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
மேலும் இந்த மாதம் என்று கணக்கெடுத்தால் அரிவாள் வெட்டு என்பது தினம்தோறும் நடக்கும் சம்பவமாக மாறியுள்ளது. கன்யாகுமரியில் தகராறை தட்டி கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி… முள்ளக்காடு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தில் போதை பழக்கம் அதிகமாகி வருவதால் குற்றசம்பவங்களும் அதிகமாகி கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் டாஸ்மாக் கடை அருகே நடந்த மோதல் சம்பவத்தில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் கிருபானந்தம். இவர் திமுக கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இவரும், அப்பு என்பவரும் சென்ற போது அங்கிருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் காயம் அடைந்த அவர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறை சேர்ந்த துளசிராமன், நடேசன், அருண், சதீஷ் ஆகிய நால்வரை கைது செய்தனர். மேலும் மோதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.