ஸ்ரீபெரும்புதுார் அருகே துளசாபுரம் கிராமத்தில் இரு கோவில்களில் இருந்த 22 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவகிரக சிலைகள் முருகர், தட்சிணாமூர்த்தி, பார்வதி, துர்கை, நாகாத்தம்மன் மூன்று சிறிய விநாயகர் உள்ளிட்ட கற்சிலைகளை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்து கோவிலுக்கு வெளியே உள்ள சாலையில் வீசி சென்றனர்.
நேற்று காலை சாலையில் சிலைகள் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் உள்ளே சென்று பார்த்த போது மூலவர் சன்னிதி கதவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்த பழைமையான கற்பக விநாயகர் சிலை சேதமின்றி தப்பியது.
இந்த கோவிலில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோவிலின் நுழைவாயில் பகுதியில் சிமென்டால் அமைக்கப்பட்டிருந்த இரண்டு துவாரபாலகர் இரண்டு பெண் காவல் தெய்வம் சிலைகள் கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலை சிங்க சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
கோவிலின் முன் இருந்த இரும்பு சூலம் இரண்டாக உடைக்கப்பட்டிருந்தது.சிலைகள் உடைக்கப்பட்டதை அறிந்த துளசாபுரம் மக்கள் 20க்கும் மேற்பட்டோர் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுங்குவார்சத்திரம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி. சுனில் சிலைகள் உடைக்கப்பட்ட கோவில்களை பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source dinamalar
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















