மஹாகவி வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் எழுதும்போது, அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்து இறந்து போனார் என்றே எழுதி இளம் உள்ளங்களில் தவறான செய்தியைப் பதித்து வருகின்றனர்.
அது உண்மையல்ல.
திருவல்லிக்கேணி கோயில் யானையின் பெயர் அர்ஜுனன், 40 வயது யானை அது. பாரதியை ஒதுக்கிக் தள்ளியபின் சோர்ந்திருந்த அந்த யானை 1923 ஆகஸ்டில் இறந்து போய்விட்டது.
அந்த யானையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு சிலகாலம் படுத்திருந்த பாரதி பின்பு உடல்நலம் தேறி பணிக்குச் சென்றார்.
அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவில் அவ்வூர் வக்கீல் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தார்.
அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா? “மனிதனுக்கு மரணமில்லை” என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார்.
1921 செப்டம்பர் முதல் தேதி, இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. மெலிந்த பலஹீனமான உடல், நோயின் உக்கிரம் தாங்கவில்லை. விரைவில் அது ரத்தக் கடுப்பு நோயாக மாறியது.
“சுதேசமித்திரன்’ பத்திரிகையிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் செப்டம்பர் 12ஆம் தேதி வேலைக்கு வந்துவிடுவதாகத் தெரிவித்தார். கொடுமை என்னவென்றால் அன்றுதான் அவர் உடலுக்கு எரியூட்டப்பட்டது.
அவருடைய இறுதி நாள்! 1921 செப்டம்பர் 11. அன்றைய இரவு அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். சில நண்பர்கள் உடன் இருக்கிறார்கள். அவர்களில் நீலகண்ட பிரம்மச்சாரியும் ஒருவர்.
அவர் சொல்லும் செய்திகள் இதோ.
“ஸ்ரீ டி.பிரகாசத்தின் சகோதரரான ஹோமியோபதி டாக்டர் டி.ஜானகிராமன், பாரதியைப் பார்க்க அழைத்து வரப்பட்டார். டாக்டர் பாரதியாரிடம் வந்து “உடம்புக்கு என்ன செய்கிறது?” என்றார்.
அவ்வளவுதான் வந்ததே கோபம் பாரதியாருக்கு. “யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கு ஒன்றும் உடம்பு அசெளக்கியம் இல்லை. உங்களை யார் இங்கே கூப்பிட்டது? என்னை சும்மா விட்டுவிட்டுப் போய்விடுங்கள்” என்று உரக்கக் கத்தினார். வேறு வழியின்றி டாக்டர் போய்விட்டார்.
பாரதியாரின் வீட்டுக்கருகில் வசித்து வந்த ஒரு வயதான அம்மாள் பாரதியிடம் வந்து “என்னப்பா பாரதி, உனக்கு உடம்பு சரியில்லையாமே…” என்று கேட்கத் தொடங்கியதுதான் தாமதம், வந்ததே கோபம் பாரதிக்கு.
“யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கு எல்லாம் சரியாகவே இருக்கிறது. என்னை இப்படி வதைப்பதைத் தவிர உங்களுக்கெல்லாம் வெறு வேலையே இல்லையா?” என்று கூச்சலிட்டார்.
அன்றிரவு, பாரதி நண்பர்களிடம் அமானுல்லா கானைப் பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த அமானுல்லாகான் ஆஃப்கானிஸ்தானில் அரசராக இருந்தவர்.
அதன்பின் முன்னிரவு முழுவதும் பெரும்பாலும் மயக்கத்தில் இருந்தார். இரவு சுமார் 1.30 மணிக்கு அந்த மகாகவியின் உயிர் பிரிந்தது. ஒரு மகாகவியின் வரலாறு இவ்வாறு முடிந்தது.
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பாரதி போன்ற ஒரு மகாகவியின் நினைவு மக்கள் மனங்களில் நீங்காமல் நிற்கும். வாழ்க பாரதி புகழ்!