‘சத்ரபதி சிவாஜி’ என அழைக்கப்படும் சிவாஜி சகாஜி போஸ்லே அவர்கள்,1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் சஹாஜி போஸ்லேவுக்கும், ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார். பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.

பேரரசை விரிவுபடுத்துதல் 1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து, தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர், பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும், 1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார்.
1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.
மொகலாயர்களுடன் போர் 1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில், முகலாய படைதளபதி கர்தாலாப் கானுடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட அவர், பிறகு சாயிஸ்தாகான் தலைமையில் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார்.
1664 மற்றும் 1670 களில் இரண்டு முறை சூரத்தை தாக்கி, கொள்ளையடித்தார். இதனால் சிவாஜியின் வெற்றியைத் தடுக்க தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்பாடுசெய்து சிவாஜியை கொலைசெய்ய அப்சல் கான் திட்டமிட்டார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜி, புலி நகத்தை பயன்படுத்தி தப்பினார்.
அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர், பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.
சத்ரபதியாக முடிசூட்டிக்கொள்ளுதல்1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார்.1676 ஆம் ஆண்டு, தென்னிந்திய பகுதிகளின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பிய அவர், வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளையும், ஆர்காட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சி முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார்.
பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது.இராணுவப் படை,குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது .
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















