உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் மே 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உ.பி.யில் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தங்கள் பலத்தை காட்ட அரசியல் கட்சிகள் முனைந்துள்ளன.
இதில், ஆளும் பாஜகவிடம் பெரிய மாற்றம் தொடங்கியுள்ளது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத கட்சியாக பாஜக இருந்தது. உ.பி.யில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெறும் 57 முஸ்லிம்களுக்கு பாஜக வாய்ப்பளித்தது. ஆனால் இந்தமுறை இந்த எண்ணிக்கை பல மடங்கு கூடியுள்ளது.
பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் கடந்த வருடம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எதிராக விமர்சனம் செய்வதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்” என பிரதமர் மோடி கோரியிருந்தார்.உ.பி.யில் பிற மாநிலங்களை விட அதிக முஸ்லிம்கள் (சுமார் 24 சதவீதம் பேர்) உள்ளனர். இவர்களில் பாஸ்மாந்தா எனும் தொழில்பிரிவு முஸ்லிம்கள் சுமார் 85 சதவீதம் உள்ளனர். இவர்களது வாக்குகளை பாஜக குறிவைத்துள்ளது.
இங்கு முதல் கட்ட தேர்தலில் 200, இரண்டாம் கட்ட தேர்தலில் 167 முஸ்லிம்களுக்கு பா.ஜ.க. வாய்ப்பு அளித்துள்ளது.
பாஜக வரலாற்றில் இவ்வாறு அதிக முஸ்லிம்களுக்கு இதுவரை வாய்ப்பளிக்கப்பட்டதில்லை. இந்த 367-ல் பாதி வேட்பாளர்கள் வென்றாலும் முஸ்லிம்கள் இடையே தமது செல்வாக்கு உயரும் என பாஜக கருதுகிறது.இது அடுத்தடுத்த தேர்தல்களில் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் உ.பி.யில் பல தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளால் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.
இது குறித்து பா.ஜனதா மாநில துணைத்தலைவர் விஜய் பகதூர் பாதக் கூறியதாவது:- உத்தரபிரதேச சட்ட மேலவையில் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் உள்ளிட்ட 4 முஸ்லிம்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் முஸ்லிம்களின் பாதுகாவலன் எனக் கூறிக்கொள்ளும் சமாஜ், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மேலவையில் முஸ்லிம்களுக்கு இந்த அளவு வாய்ப்பு அளிக்கவில்லை. அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்கள் என்று பிரதமர் கூறுவதை உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. மெய்ப்பித்து வருகிறது. இவ்வாறு விஜய் பகதூர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















