ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ள பாஜக பிரமுகர் சஜாத் அகமது என்றவர் இன்று காலை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார் சஜாத் அகமது. ஸ்ரீநகரிலிருந்து 60கி.மீ தூரத்தில் உள்ள குல்காமின் காசிகுண்டில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே சஜாத் அகமது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சஜாத்தை அழைத்துச்சென்றுள்ளனர்.அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே பகுதியில் பாஜகவை சேர்ந்த மற்றொரு பஞ்சாயத் தலைவர் ஆரிஃப் அகமது கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மாதம் பந்திபோரா மாவட்டத்தில் பாஜவை சேர்ந்த சேக் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர். சேக் வாசிம் அந்த மாவட்டத்தின் பாஜக தலைவர் ஆவார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட் என்ற புதிய பயங்கரவாத குழு பொறுப்பேற்றது. தொடர்ந்து, வாசிமின் மரணம் கட்சிக்கு பெரும் இழப்பு என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா இரங்கல் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், வாசிமின் மரணம் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த கட்சியும் துயரமடைந்த குடும்பத்திற்கு துணை நிற்கிறது. அவர்களின் தியாகம் வீணாகது என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.