டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தின் புதிய கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் உணர்ச்சி பொங்க பேசினார். பாஜக எப்படி வளர்ந்தது என்பதை குறித்தும் வரும் காலங்களில் பாஜக வினர் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்தும் பேசினார்;
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை விரிந்துள்ள ஒரே பான் இந்தியா கட்சி பாஜக தான். வெறும் 2 எம்.பிக்களுடன் தொடங்கிய பயணம் இன்று 303 இடங்களை தொட்டிருக்கிறது,மேலும் நாட்டின் 4 திசைகளிலும் பரவிய ஒரே தேசிய கட்சியாக பாஜக உள்ளது. பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி மட்டுமல்ல, எதிர்காலம் சார்ந்த மிகப்பெரிய பார்வையைக் கொண்ட கட்சி. பாஜகவின் இலக்கு நவீன, வளர்ச்சியடைந்த இந்தியா என கூறினார்.
பான் இந்தியா கட்சி
“1984ல் இந்த நாடு மிகவும் துயரமான காலத்தை அனுபவித்தது. காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது, நாம் அனைவரும் அந்த அலையில் முற்றிலும் அழிந்தோம். ஆனால் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை, மற்றவர்களைக் குறை கூறவில்லை. இன்று கிழக்கில் இருந்து மேற்கு வரை, வடக்கில் இருந்து தெற்கு வரை விரிந்துள்ள ஒரே பான் இந்தியா கட்சி பாஜக தான். குடும்பக் கட்சிகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் ஒரே பான் இந்தியா கட்சியாக உள்ளோம்.
ட்விட்டர், யூடியூபால் வளரவில்லை ;
நமக்கு மிக வலிமையான ஜனநாயக அடித்தளம் உள்ளது. அதை தடுப்பதற்காகவே ஜனநாயக அமைப்பை தாக்குகிறார்கள். ஜனநாயக அமைப்புகள் தங்களது கடமைகளை செய்தால் அவை விமர்சிக்கப்படுகின்றன. பாஜக தொலைக்காட்சி மூலமோ, செய்தித்தாள் மூலமோ வந்த கட்சி இல்லை. ட்விட்டர் கணக்குகள் மூலமோ அல்லது யூடியூப் மூலமோ வளரவில்லை. தொண்டர்களின் கடின உழைப்பால் வளர்ந்த கட்சி இது.
வலுவான யுத்தத்துக்கு தயாராக இருங்கள்
பாஜக எவ்வளவு வெற்றிகள் பெறுகிறதோ அவ்வளவு எதிர்ப்புகள் வரும் என்பதால் வலுவான யுத்தத்துக்கு தயாராக இருங்கள்” என்றார். மேலும் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, பாஜக எம்பிகள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். வரும் மே 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதிக்குள் இந்த பரப்புரையை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.