ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்,ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், பாஜகவில் இணைந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கிய தலைவராகவும், அம்மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த சம்பாய் சோரன், இரண்டு நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆக.30) ராஞ்சியில் நடைபெற்றது.
இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்ட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கே இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
67 வயது தலைவரான சம்பாய் சோரன், ஜார்க்கண்ட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள பழங்குடியின சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். பிஹாரில் இருந்து தனி மாநிலமாக ஜார்க்கண்ட் பிரிய காரணமாக இருந்த போராளிகளில் ஒருவர் என்பதால் இவருக்கு ‘ஜார்க்கண்ட் புலி’ என்ற பட்டப்பெயர் உள்ளது. பழங்குடி சமூகத்துடன் பாஜகவுக்கு இருக்கும் தொடர்பை அதிகரிக்கும் முயற்சியாக சம்பாய் சோரனின் வருகை பார்க்கப்படுகிறது.