தெலுங்கானாவில்முதல்வர் சந்திரசேகர ராவ்தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்ட சபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நிஜாமாபாதில் நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, காங்கிரஸ் கூறுகிறது. அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், அதிகளவில் உள்ள ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வழிபாட்டு தலங்களை மாநில அரசு வலுகட்டாயமாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
அதுபோல, சிறுபான்மையினருக்கு சொந்தமான வழிபாட்டு தலங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் இந்த மாநில அரசுகள் கொண்டு வருமா? நிச்சயம் செய்ய மாட்டார்கள்.தமிழகத்தில் ஹிந்து கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது.
எவ்வளவு மக்கள்தொகையோ அதற்கேற்ற உரிமை என்று கூறும் காங்கிரஸ், தமிழகத்தில் உள்ள தன் கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம், கோவில்களை ஹிந்து மக்களிடம் ஒப்படைக்கும்படி கூறுமா?
பா.ஜ.,வை பொருத்தவரை, ஜாதி, மதம் என்ற அடிப்படையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், ஏழ்மையில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான், இந்த அரசின் நோக்கமாகும். அதை செய்வதையே எங்களுடைய கடமையாக கருதுகிறோம்.என பிரதமர் மோடி பேசினார்.