பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாலும், கொரோனா பாதிப்பால் பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், இந்த பட்ஜெட்டில் (Budget 2022) தங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர். இந்த வரிசையில், பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்படுவதைத் தவிர, பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கும் பெரிய நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்துவோர் பெரிய பலனைப் பெறும் வகையிலான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இவ்வாறான நிலையில் இம்முறை அரசாங்கம் வரிவிலக்கை பரிசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் நல்ல செய்திகளை வழங்கக்கூடும்
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) 3 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத்தொகையை வரி விலக்கு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் நிச்சயம் பெரிய நிவாரணம் கிடைக்கும். வரி செலுத்துவோரை மகிழ்விக்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
எஃப்டிக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை
இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) வரியில்லா நிரந்தர வைப்புத்தொகையின் (Fixed Deposit) லாக்-இன் காலத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது, 5 வருட FD-க்கு வரி விலக்கு கிடைக்கிறது. ஆனால், அதை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சங்கத்தின் கூற்றுப்படி, 3 வருட FD-யை வரி விலக்கின் கீழ் கொண்டு வருவதன் மூலம், வரி செலுத்துவோருக்கு மற்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வசதியும் கிடைக்கும்.
தற்போது மக்கள் குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக எஃப்டிக்கு பதிலாக பிபிஎஃப் மற்றும் சுகன்யா போன்ற பிற திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், மியூச்சுவல் ஃபண்டுகளும் துணிகர முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
80C வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரிவிலக்கு (Tax Exemption) அளிக்கப்படுகிறது. இதில், பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா, ஆயுள் காப்பீடு என பல திட்டங்கள் உள்ளன. முன்னதாக 2014-ம் ஆண்டு 80சி வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதாவது கடந்த 8 வருடங்களாக இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக சம்பளம் பெறும் வகுப்பினருக்கு, வரியைச் சேமிக்க 80சி பிரிவு சிறந்த வழியாக உள்ளது. இந்தப் பிரிவின் கீழ் அரசு விலக்கு வரம்பை அதிகப்படுத்தினால், அதிகமானோர் அதில் முதலீடு செய்வார்கள்.
அடிப்படை வரம்பை அதிகரிக்கலாம்
அடிப்படை வரி விலக்கு வரம்பு தற்போது ரூ.2.5 லட்சமாக உள்ளது. முன்னதாக 2014-ம் ஆண்டு இது 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இதிலும் எந்த மாற்றமும் இல்லை.
எனவே, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அரசாங்கம், அடிப்படை வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அடிப்படை வரம்பு அதிகரிக்கப்பட்டால், வரி செலுத்துவோர் அதாவது ஒரு குறிப்பிட்ட வகுப்பின் வாக்காளர்கள் மகிழ்ச்சியடையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source zee news
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















