தொழில் நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வந்தாலும் அதனால் ஏற்படும் நன்மைகள் எவ்வளவோ அதே அளவில் தீமைகளும் உள்ளது. மேலும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பெண்களின் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனலும் வேறு வேறு பெயர்களில் புதிய புதிய ஆப்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் புல்லி பாய் (bulli bai) என்ற செயலியில் பல பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய விவரங்கள் இடம்பெற்று அவர்கள் எல்லாம் ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலும் இஸ்லாமிய பெண்களாக இருந்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.
முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ‘சுல்லி’ என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துவதாக புகார் உள்ளது. ‘சுல்லி டீல்ஸ்’முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் வகையில் ‘சுல்லி டீல்ஸ்’ என்ற சமூக வலைதளம் பயன்பாட்டில் இருந்தது. பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அதை, மத்திய அரசு கடந்தாண்டு முடக்கி வைத்தது.
இந்நிலையில் முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் ‘புல்லி பாய்’ என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல முஸ்லிம் பெண்கள் புகார் அளித்துஉள்ளனர். டில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் இஸ்மத் ஆரா, சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார். சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதியும், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பா.ஜ.க வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் அந்தப் பதிவை அனுப்பியிருந்தார்.
இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துஉள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துஉள்ளார். ”இணையதளத்தில் செயலிகளை பதிவு செய்யும் ‘கிட்ஹப்’ தொகுப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ‘புல்லி பாய்’ சமூக வலைதளம் உடனடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது,” என, அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி, டில்லி போலீஸ் மற்றும் ‘ஐசெர்ட்’ எனப்படும் கம்ப்யூட்டர் அவசரகால உதவி அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் படங்களை பதிவிட்டு, அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன. உண்மையில் அவர்கள் ஏலம் விடப்படாவிட்டாலும், ஏலத்தில் பதிவிட்டுள்ளதன் வாயிலாக, அவர்களை இழிவுபடுத்துவதே இந்த செயலியை உருவாக்கியவர்களின் நோக்கம்.’எனவே இந்த செயலியை முடக்கியதுடன், அதை உருவாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.