இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை (PCIM&H) ஆயுஷ் அமைச்சகத்தின் துணை அலுவலகமாக அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காசியபாத்தில் 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு மத்திய ஆய்வகங்களான இந்திய மருத்துவத்துக்கான மருந்தக ஆய்வகம் ((PLIM) மற்றும் ஹோமியோபதி மருந்தக ஆய்வகம் ஆகியவற்றை PCIM&H உடன் இணைப்பதன் மூலம் இது உருவாக்கப்படும்.
2010இல் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தற்சமயம் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மூன்று அமைப்புகளின் நிதி வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தவும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் நிர்ணயிக்கப்பட்ட வெளிப்பாடுகளை மேம்படுத்தவும், அவற்றின் சிறப்பான ஒழுங்குமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காகவும் இந்த இணைப்பு செய்யப்படுகிறது.
ஆயுஷ் மருந்துகளின் தர மேம்பாட்டுக்கும், மருந்தின் குணங்களையும், செய்யும் முறைகளையும் விளக்கும் நூல்களின் வெளியீட்டுக்கும் ஒன்றிணைந்த மற்றும் கவனம் மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த இணைப்பு வழி வகுக்கும். மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான விதிகள், 1945-இல் தேவையான மாறுதல்களைச் செய்து, வழிவகைகளை உருவாக்குவதன் மூலம், இணைக்கப்பட்ட அமைப்பான இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் அதன் ஆய்வகத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர், மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மருந்துகள் தொடர்பாக ஆலோசனை வழங்க மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான சட்டம், 1940-இன் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான ஆயுர்வேத, சித்த மருத்துவ மற்றும் யுனானி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆகியவற்றுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பதவிகளையும், படிநிலைகளையும் மாற்றியமைக்கும் திட்டத்துக்கு நிதி அமைச்சகத்தின் செலவுகள் துறை ஒத்துக்கொண்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















