தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்துதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்திற்கு போதுமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது மிகப்பெரிய பொய் என்பதை தமிழக பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை மூலம் நிரூபிக்க விரும்புகிறோம். திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும்தான். மு.க.ஸ்டாலின் அவற்றில் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மட்டுமே தெரிகிறது.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், தமிழகம் ரூ.10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வரலாறு காணாத ஊழலால் தமிழ்நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதைத் தவிர வேறு என்ன கிடைத்தது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான போக்குவரத்து, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்கள், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.